Published : 27 May 2021 03:10 AM
Last Updated : 27 May 2021 03:10 AM

பருப்பு, பாமாயில் கொள்முதலுக்கு இடைக்கால தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை

கரூரைச் சேர்ந்த மணிகண்டன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழ்நாடு உணவுப் பொருள் வாணிபக் கழகம் சார்பில் 2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் பருப்பு, பாமாயில், சீனி மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படுகின்றன.

இந்நிலையில் 20 ஆயிரம் மெட்ரிக் டன் பருப்பு கொள்முதலுக்கான டெண்டர் அறிவிப்பு 26.4.2021-ல் வெளியிடப்பட்டது. 80 லட்சம் லிட்டர் பாமாயில் கொள்முதலுக்கான டெண்டர் அறிவிப்பு 5.5.2021-ல் வெளியிடப்பட்டது. இந்த டெண்டர் நிபந்தனைகளில் பல நிபந்தனைகள் மாற்றப்பட்டுள்ளன.

முன்பு டெண்டரில் கலந்து கொள்ளும் நிறுவனத்தின் ஆண்டு வருமானம் ரூ.71 கோடியாக இருக்க வேண்டும். தற்போது ஆண்டு வருமானம் ரூ.11 கோடி இருந்தால் போதும் எனக் கூறப்பட்டுள்ளது. டெண்டர் மதிப்பு ரூ.2 கோடிக்கு மேல் இருந்தால் டெண்டர் விண்ணப்பிக்க 30 நாள் அவகாசம் தர வேண்டும். ஆனால் இந்த டெண்டர் 6 நாளில் முடிக்கப்பட்டுள்ளது.

இந்த விதிமீறலால் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தால் வெளியிடப்பட்டுள்ள பருப்பு கொள்முதல் மற்றும் பாமாயில் கொள்முதல் டெண்டர் அறிவிப்பாணையை ரத்து செய்து, முந்தைய நிபந்தனைகளின்படி புதிய அறிவிப்பாணை வெளியிட உத்தரவிட வேண்டும். டெண்டர் அறிவிப்பாணையை செயல்படுத்த இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு, நீதிபதி வேலுமணி முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில், கரோனா காலத்தில் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்திசெய்யும் நோக்கத்தில் அவசர கால டெண்டர் விடப்பட்டுள்ளது. இதனால் டெண்டருக்கு தடை விதிக்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டது.

பின்னர் நீதிபதி தனது உத்தரவில், மனு தொடர்பாக தமிழக அரசு விரிவான பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். அதுவரை பருப்பு, பாமாயில் கொள்முதல் டெண்டர் அறிவிப்பாணைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது எனத் தெரிவித்தார். அடுத்த விசாரணையை 4 வாரத்துக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x