Published : 27 May 2021 03:10 AM
Last Updated : 27 May 2021 03:10 AM

கரோனா தொற்று 10 சதவீதம் குறைந்துள்ளது: சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

``தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டு உள்ள ஊரடங்கு மற்றும் அரசின் நடவடிக்கைகளால் கரோனா தொற்று 10 சதவீதம் குறைந்துள்ளது” என சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து திருநெல்வேலி, கூடங்குளம், வள்ளியூர் பகுதிகளில் நேற்று அமைச்சர் ஆய்வு செய்தார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

தமிழகத்தில் மருத்துவப் பணிகளுக்காக 3,700 மருத்துவம் சார்ந்த பணியாளர்களும், 2,100 மருத்துவர்களும், 6,000 செவிலியர்களும் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில், மருத்துவர்களின் இடமாறுதல் கவுன்சிலிங் அவர்களது தகுதிக்கு ஏற்ப வெளிப்படைத் தன்மையுடன் நடைபெற்று உள்ளது.

வள்ளியூரில் சுகாதாரத்துறை இணை இயக்குநர் அலுவலகம் மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். கூடங்குளம் அணு மின்நிலைய வளாகத்தில் தடுப்பூசி சிறப்பு முகாம் அமைக்கப்படும். இங்கு வெளிமாநிலத் தொழிலாளர்கள் அதிகளவில் பணி செய்வதால் கூடங்குளம் அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டு ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் மற்றும் மகப்பேறு மையம் அமைக்கப்படும்.

தமிழகத்தில் கரோனா தொற்று அதிகம் உள்ள மாவட்டங்களில் பணிகளை தீவிரப்படுத்த கூடுதல் ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கு மற்றும் தமிழக அரசின் நடவடிக்கையின் காரணமாக கரோனா தொற்று 10 சதவீதம் குறைந்துள்ளது.

திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கூடுதலாக 500 படுக்கைகள் ஆக்சிஜன் வசதியுடன் ஏற்படுத்தப்படும். தமிழகத்தில் ஆக்சிஜன் தேவை தன்னிறைவு பெற்றுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தேவைகள் பூர்த்தி செய்யப்படும். தடுப்பூசி போடும் பணி முழு வேகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

18 முதல் 44 வயதுள்ளவர்களுக்காக, ரூ.85.47 கோடி மத்திய அரசுக்கு செலுத்தப்பட்டு, 26 லட்சம் தடுப்பூசிகள் பெறப்பட்டுள்ளன. தமிழகத்தில் இதுவரை 75 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுள்ளனர். நேற்று ஒரேநாளில் 2.57 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

3.5 கோடி தடுப்பூசிகளை வாங்க உலகளாவிய ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. ஜூன் 6-ம் தேதி இதற்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்படும். 2-வது தவணை கோவேக்சின் தேவைப்படுவோருக்கு கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் 256 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

தமிழக சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு, ஞானதிரவியம் எம்பி, சுகாதாரத் துறைச் செயலர் ராதாகிருஷ்ணன், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணு, சட்டப்பேரவை உறுப்பினர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x