பத்திரப்பதிவில் அரசுக்கு வருவாய் இழப்பு புகாரில் தொழிலதிபர் சேகர் ரெட்டி உட்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு: லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் நடவடிக்கை

பத்திரப்பதிவில் அரசுக்கு வருவாய் இழப்பு புகாரில் தொழிலதிபர் சேகர் ரெட்டி உட்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு: லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் நடவடிக்கை
Updated on
1 min read

வேலூர் சத்துவாச்சாரியைச் சேர்ந்த எஸ்.எம்.சுந்தரம், காட்பாடியைச் சேர்ந்த ரமேஷ்பாபு, ஜி.எம்.ஜெகநாதன், சத்துவாச்சாரியைச் சேர்ந்த கணேசன், சதானந்தன், திண்டிவனத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன், வேலூர் தோட்டப்பாளையம் குமரேசன் உள்ளிட்ட 7 பேர் சேர்ந்து காட்பாடியில் 5.88 ஏக்கர் நிலத்தை வாங்கி ரியல் எஸ்டேட் தொழில் செய்துள்ளனர்.

இதில், வீட்டுமனைகள் எதிர்பார்த்த அளவுக்கு விற்பனைஆகாததால் 5.27 ஏக்கர் அளவுக்கு விற்பனையாகாத நிலத்தை 7 பங்குதாரர்களும் தலா 75 சென்ட் வீதம் பிரித்து பத்திரப் பதிவு செய்து கொண்டனர்.

இந்நிலத்தை பவர் ஏஜென்ட் பரசுராமன் என்பவர் மூலம் தொழிலதிபர் சேகர் ரெட்டிக்கு 1-12-2016-ம் ஆண்டு விற்பனை செய்து காட்பாடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து 7 பங்குதாரர்களிடமிருந்து குறைந்த விலைக்கு வாங்கியுள்ளார்.

அப்போது, காட்பாடி சார் பதிவாளராக இருந்த சம்பத், சேகர் ரெட்டி பதிவு செய்துள்ள நிலத்தை குறைவாக மதிப்பிட்டு முத்திரைக் கட்டணம் செலுத்தியுள்ளதாகக் கூறி வேலூர் மாவட்ட துணை ஆட்சியர் (முத்திரைக் கட்டணம்) பிரிவுக்கு பரிந்துரை செய்தார். அதன்படி, அப்போது துணை ஆட்சியராக இருந்த அப்துல் முனீர் நிலத்தின் வழிகாட்டு மதிப்பு ஒரு சென்ட் ரூ.45 ஆயிரம் என மதிப்பீடு செய்து முத்திரைக் கட்டணத்தை வசூலித்துள்ளனர். சுமார் 13 கோடியே 72 லட்சத்து 14 ஆயிரம் மதிப்பிலான நிலத்தை ரூ.2 கோடியே 46 லட்சத்து 98 ஆயிரத்து 520 மதிப்புக்கு சேகர் ரெட்டிக்கு பத்திரப் பதிவு செய்துள்ளனர்.

இதன் மூலம் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்ட புகாரின் அடிப்படையில் அப்போதைய காட்பாடி சார் பதிவாளரும் தற்போது நாகப்பட்டினம் மாவட்ட சார் பதிவாளராக உள்ள சம்பத், அப்போதைய முத்திரைக் கட்டண துணை ஆட்சியரும் தற்போதைய தருமபுரி மாவட்டம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளராக உள்ள அப்துல் முனீர், நிலத்தின் பவர் ஏஜென்ட் பரசுராமன் மற்றும் தொழிலதிபர் ஜெ.சேகர் ரெட்டி மற்றும் நிலத்தை விற்பனை செய்த பங்குதாரர்கள் 7 பேர் உட்பட 11 பேர் மீது கடந்த 13-ம் தேதி லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து,மேலும் விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in