Published : 27 May 2021 03:10 AM
Last Updated : 27 May 2021 03:10 AM

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் காய்கறி வாகனங்கள் வராததால் பொதுமக்கள் அவதி

கோவை கெம்பட்டி காலனி பகுதிக்கு நேற்று வந்த வாகனத்தில் காய்கறிகள் வாங்க நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள். படம்: ஜெ.மனோகரன்

கோவை

முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் காய்கறி வாகனங்கள் வராத காரணத்தால், பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.

கரோனா தொற்றின் 2-ம் அலை பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் வரும் 31-ம் தேதி வரை முழுஊரடங்கு அமலில் உள்ளது. மளிகை, காய்கறி உள்ளிட்ட அனைத்துக் கடைகளையும் திறக்க தடை விதிக்கப்பட்டுள் ளது.

இதனால், பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில், வாகனங்கள் மூலமாக காய்கறி, பழங்கள்விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டுள் ளது. கோவை மாநகராட்சி சார்பில் காய்கறி வாகனங்களின் செயல்பாடு கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.

விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு ஏற்படுவதை தவிர்க்க, மொத்த காய்கறி வியாபாரிகள் வெளியூர்களில் இருந்து காய்கறிகளை கொள்முதல் செய்து வரவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், 400-க்கும் மேற்பட்ட தனியார் காய்கறி விற்பனை வாகனங்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும், இவற்றை கண்காணிக்க தனி அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி ஆணையர் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மாநகரில் பல்வேறு பகுதிகளில் காய்கறி வாகனங்கள் வராத காரணத்தால் பொதுமக்கள் பலர்காய்கறி, பழங்கள் கிடைக்காமல் சிரமத்தை சந்தித்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.

குறிப்பாக, மாநகராட்சி கிழக்கு மண்டலத்துக்கு உட்பட்ட விளாங்குறிச்சி, சேரன் மாநகர் பகுதிகளில் நேற்று (மே 26) மாலை வரை காய்கறி விற்பனை வாகனங்கள் எதுவும் வரவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். வாகனங்கள் வந்த இடங்களில், காய்கறிகளை வாங்க மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. கெம்பட்டி காலனியில் காய்கறி வாங்க பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

சேரன் மாநகர் பகுதி பொதுமக்கள் கூறும்போது, “கடந்த 3 நாட்களாக எந்த காய்கறி விற்பனை வாகனங்க ளும் வரவில்லை. ஊரடங்குஅமல்படுத்தப்படுவதற்கு முந்தையநாளில் வாங்கிய பொருட்களை வைத்து சமாளித்து வருகிறோம்.

இதைப் பயன்படுத்தி சிலர் காய்கறி,மளிகைப் பொருட்களை கூடுதல் விலைக்கு மறைமுகமாக விற்று வருகின்றனர். தேவை ஏற்பட்டுள்ளதால், வேறு வழியில்லாமல் கூடுதல் விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். காய்கறி வாகனங்கள் அனைத்து பகுதிகளுக்கும் செல்ல மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x