

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்குட்பட்ட காராச்சிக்கொரையைச் சேர்ந்தவர் ராஜன் (45). வனப்பகுதியை ஒட்டியுள்ள இவரது நிலத்தில் வாழை பயிரிட்டுள்ளார். வன விலங்குகளிடம் இருந்து பயிர்களைக் காக்க மின் வேலி அமைத்து இருந்தார்.
இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஆண் யானை, ராஜனின் வாழைத் தோட்டத்திற்குள் நுழைய முயற்சித்தது. அப்போது மின்வேலியில் இருந்து பாய்ந்த உயர் அழுத்த மின்சாரத்தால் யானை உயிரிழந்தது. இதுகுறித்து சத்தியமங்கலம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான தோட்ட உரிமையாளர் ராஜனைத் தேடி வருகின்றனர்.
வனப்பகுதிக்கு அருகே உள்ள விளை நிலங்களில், யானைகள் விரும்பி உண்ணக்கூடிய கரும்பு, வாழை போன்ற பயிர்களைப் பயிரிட வேண்டாம் என வனத்துறை தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. அதேபோல், மின்வேலியில் விதிகளுக்கு மாறாக உயர் அழுத்த மின்சாரம் பாய்ச்சக்கூடாது என்றும் விவசாயிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.