

தருமபுரி மாவட்டத்தில் சாலை வசதி இல்லாத அலகட்டு மலைக் கிராம உழவுப் பணிக்கு டிராக்டர் அழைத்துச் செல்ல அனுமதி கிடைத்ததால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் வட்டுவன அள்ளி ஊராட்சியில் கோட்டூர் மலை, ஏரிமலை, அலகட்டு என்ற 3 மலைக் கிராமங்களுக்கு இதுவரை சாலை வசதிகள் இல்லை. ஒவ்வொரு மலைக் கிராமத்துக்கும் மலை அடிவாரத்தில் இருந்து சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் நடந்து தான் பயணிக்க வேண்டும். சாலை வசதி, பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை இந்த கிராம மக்கள் தொடர்ந்து அரசிடம் வலியுறுத்தி வருகின்றனர். ஆனாலும், கோரிக்கைகள் நிலுவையிலேயே இருந்து வந்தது. எனவே, கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் தேர்தலை புறக்கணிப்பதாக, கடந்த சட்டப் பேரவை தேர்தல் நாளன்று அறிவித்தனர்.
அதிகாரிகளின் நீண்டநேர பேச்சுவார்த்தைக்கு பின்னர் ஏரிமலை, அலகட்டு கிராம மக்கள் மட்டும் வாக்களித்தனர். அப்போது, அதிகாரிகளிடம் தங்களின் கோரிக்கைகளுக்கு எழுத்துப்பூர்வ உத்தரவாதம் அளிக்கும்படியும் எழுதி பெற்றுக் கொண்டனர். அதில், நிரந்தர சாலை அமைத்துத் தரும் வரை, அலகட்டு மலைக்கு தற்காலிக சாலை அமைத்து உழவுப்பணிக்கு டிராக்டரை மலை மீது எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்பதையும் குறிப்பிட்டிருந்தனர். அலகட்டு மலைக்கு நடந்து செல்ல அமைக்கப்பட்டுள்ள சாதாரண வழித்தடத்தை, தேர்தலுக்கு பிறகு கிராம இளைஞர்கள் இணைந்து டிராக்டரை ஓட்டிச் செல்லும் வகையிலான பாதையாக சீரமைத்தனர். ஆனால், டிராக்டரை மேலே அழைத்துச் செல்ல வனத்துறை அனுமதி கிடைப்பதில் சிக்கல் நிலவி வந்தது.
இதுதொடர்பாக கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி, தருமபுரி கோட்டாட்சியர் பிரதாப் ஆகியோருக்கு கோரிக்கை வைத்தனர். அவர்களின் நடவடிக்கையால் மலைமீது டிராக்டரை அழைத்துச் செல்ல வனத்துறை அனுமதி வழங்கியது. அதைத் தொடர்ந்து, 2 டிராக்டர்களை அலகட்டு மலைக்கு அழைத்துச் சென்ற கிராம மக்கள் தங்கள் கிராம விளைநிலங்களை அவற்றின் மூலம் உழவு செய்தனர்.
சுமார் 100 பேர் வசிக்கும் இந்த மலைக் கிராம விளைநிலங்களில் முதல் முறையாக டிராக்டர் இயந்திரம் மூலம் உழவு மேற்கொள்ளும் பணியை கிராம மக்கள் திரண்டிருந்து வேடிக்கை பார்த்தனர்.
மேலும், தங்களின் தற்காலிக கோரிக்கைக்கு அனுமதி அளித்த மாவட்ட நிர்வாகத்துக்கு நன்றி தெரிவித்துள்ள அவர்கள், இதர கோரிக்கைகளையும் விரைந்து நிறைவேற்றித் தர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.