

சென்னையில் கடந்த 2 நாட்களில், நடமாடும் கடைகள் மூலமாக 3,790 டன் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களின் அன்றாட தேவைகளான காய்கறி, பழங்கள் மற்றும் பூக்கள் ஆகியவற்றை நடமாடும் வாகனங்கள் மூலம் 200 வார்டுகளிலும் வினியோகிக்க கூட்டுறவுத் துறை, தோட்டக்கலை துறை, சிஎம்டிஏ, வேளாண்மை விற்பனை வாரியம் மற்றும் வணிகர் சங்கங்களுடன் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அதன்படி கோயம்பேடு வணிக வளாகத்தில் இருந்து மண்டலங்களுக்கு 2,102 சிறிய மோட்டார் வாகனங்கள் மூலமும், மண்டலங்களிலிருந்து வார்டுகளில் உள்ள அனைத்து தெருக்களுக்கும் 5,345 மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் தள்ளு வண்டிகள் மூலமும் காய்கறி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த 2 நாட்களில் கோயம்பேடு வணிக வளாகத்திலிருந்து நடமாடும் வாகனங்கள் மூலம் 3,790 டன் காய்கறிகள், 1,220 டன் பழங்கள் மற்றும் 31 டன் பூக்கள் கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இந்த காய்கறிகளை விற்பனை செய்யும் வணிகர்கள், ஊரடங்கு காலத்தில் தங்கள் பகுதிகளிலிருந்து சென்றுவர மாநகராட்சியின் சார்பில் அடையாள வில்லைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் விருப்பம் உள்ள வியாபாரிகள் தள்ளுவண்டிகளில் காய்கறிகளை விற்பனை செய்ய மண்டல அலுவலர்கள் மூலமாகவும் அடையாள வில்லைகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த நடமாடும் காய்கறி விற்பனையில் ஏற்படும் நடைமுறை சிக்கல்கள் குறித்த தகவல்களை பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் 94999 32899, 044-4568 0200 ஆகிய எண்களில் தெரிவிக்கலாம். இந்த எண்களுக்கு கடந்த 2 நாட்களில் 315 அழைப்புகள் பெறப்பட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 3 சக்கர வாகனங்கள் மற்றும் தள்ளு வண்டிகள் மூலம் காய்கனிகள் விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் குறித்த விவரங்கள் www.chennaicorporation.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அந்த இணையதளத்தில், கோவிட்-19 (Covid-19) எனும் இடத்தில் உள்ளீடு செய்தால் பொது மக்கள் தங்கள் பகுதிகளில் காய்கறி மற்றும் பழங்களை விற்பனை செய்யும் விற்பனையாளர்களின் பெயர், தொடர்பு எண், வாகன எண் , விற்பனை செய்யுமிடம் அல்லது வார்டு விவரங்களை அறிந்துகொள்ளலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.