

காஞ்சிபுரம் ஸ்ரீசங்கர மடத்தில் மகா பெரியவர் ஜெயந்தி விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி, சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன.
காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பக்தர்களால் மகா பெரியவர் என்று போற்றப்படும் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஜெயந்தி மகோத்சவம் எளிமையான முறையில் நேற்று நடைபெற்றது. இதையொட்டி, அவரது பிருந்தாவனத்தில் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. இதில் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
இந்த விழாவில், மடாதிபதி ஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பங்கேற்று, பூஜைகளை நடத்தினார். தொடர்ந்து, வேத பாராயண கோஷ்டிகளுக்கு சிறப்பு மரியாதை செய்யப்பட்டு, அன்னதானம் நடைபெற்றது. ஏற்பாடுகளை காஞ்சி காமாட்சி சங்கர மடத்தின் வரவேற்புக் குழுவினர் செய்திருந்தனர். காஞ்சிபுரம் சங்கர மடத்தின் ஸ்ரீகாரியம் சல்லா விஸ்வநாத சாஸ்தரி, காமாட்சி அம்மன் கோயில் ஸ்ரீகாரியம் சுந்தரேச அய்யர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்று, அன்னதானம் வழங்கினர்.