பிஎஸ்பிபி பள்ளி முதல்வரிடம் போலீஸார் 2-வது நாளாக விசாரணை: ஆசிரியர்களின் அத்துமீறல்கள் தொடர்பாக 30 பேர் புகார்

பிஎஸ்பிபி பள்ளி முதல்வரிடம் போலீஸார் 2-வது நாளாக விசாரணை: ஆசிரியர்களின் அத்துமீறல்கள் தொடர்பாக 30 பேர் புகார்
Updated on
1 min read

சென்னை கே.கே நகரில் இயங்கி வரும் பத்ம சேஷாத்ரி பால பவன் (பிஎஸ்பிபி) பள்ளியில் வணிகவியல் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் சென்னை நங்கநல்லூரைச் சேர்ந்த ராஜகோபாலன் (59). இவர் வகுப்பில் மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், அநாகரிகமாக பேசியதாகவும், வாட்ஸ்-அப்பில் பாலியல் உணர்வை தூண்டும் வகையில் குறுஞ்செய்திகளையும், படங்களையும் அனுப்பியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து அசோக்நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் போக்சோ உட்பட 5 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து ராஜகோபாலனை கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு தொடர்பாக போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

100 கேள்விகள்

அதன் தொடர்ச்சியாக பள்ளியின் முதல்வர் கீதா கோவிந்தராஜனிடம் தியாகராய நகர் காவல் துணை ஆணையர் ஹரிகரன் பிரசாத், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு காவல் துணை ஆணையர் ஜெயலட்சுமி ஆகியோர் நேற்று 2-வது நாளாக விசாரணை நடத்தினர். அப்போது, ஆசிரியர் ராஜகோபாலனுக்கு ஆதரவாக பள்ளி நிர்வாகம் செயல்பட்டதா? அவரின் அத்துமீறல்கள் நிர்வாகிகளின் கவனத்துக்கு ஏற்கெனவே வந்ததா? உள்ளிட்ட சுமார் 100 கேள்விகளை போலீஸார் கேட்டுள்ளனர்.

அதற்கு கீதா கோவிந்தராஜன் அளித்த பதில்களை வீடியோவாக பதிவு செய்துள்ளனர். மேலும், எழுத்து பூர்வமாகவும் பெற்றுள்ளனர். தேவைப்பட்டால் அடுத்த கட்ட விசாரணைக்கு அழைத்தால் வர வேண்டும் என கூறி அனுப்பி வைத்துள்ளனர்.

இது ஒருபுறம் இருக்க காவல் துணை ஆணையர் ஜெயலட்சுமியின் செல்போன் எண்ணுக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த மாணவிகள், முன்னாள் மாணவிகள் என சுமார் 30 பேர் தங்கள் ஆசிரியர்களின் அத்துமீறல்கள் தொடர்பாக புகார் தெரிவித்ததாகவும், சென்னையில் மட்டும் 10 பேர் புகார் கூறியதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in