Published : 27 May 2021 03:11 AM
Last Updated : 27 May 2021 03:11 AM

உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்னேற்பாடாக எல்லை மறுசீரமைப்பு நகல் புதுச்சேரி அரசிதழில் வெளியீடு

புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்னேற்பாடாக எல்லை மறுசீரமைப்பு நகல் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

புதுச்சேரி யூனியன் பிரதேசம் மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ளது. புதுச்சேரி,காரைக்கால், மாஹே, ஏனாம் உள்ளிட்ட 4 பிராந்தியங்கள் உள்ளன. புதுவையில் 23, காரைக்காலில் 5, மாஹே, ஏனாம் தலா 1 என மொத்தம் 30 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன.

கரோனா நெருக்கடியில் தேர்தலா?

புதுச்சேரி ஒருங்கிணைந்த அமைச்சக ஊழியர்கள் சங்கத்தின் பொதுச்செயலர் ராஜேந்திரன் மாநில தேர்தல் ஆணையருக்கு மனு ஒன்றை அளித்துள்ளார்.

அதில்," சட்டப்பேரவை பொதுத் தேர்தல் புதுச்சேரியில் நடந்ததைத் தொடர்ந்து கரோனா நோய் தொற்று அதிகரித்து, பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய் தொற்றுக்கு தேர்தல் கூட்டங்கள் பெருமளவில் நடத்தியதும் ஓரு முக்கிய காரணம். முறையான நடவடிக்கை எடுக்காவிட்டால் மூன்றாவது அலையை நாம் சந்திக்க நேரிடும்.

இத்தருணத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டால் கரோனா நோய் பரவல் அதிகமாகும். குறிப்பாக, உத்தர பிரதேசத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த பணியில் அமர்த்தப்பட்ட பல அரசு ஊழியர்கள் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். உள்ளாட்சித் தேர்தல் நடத்த இது தகுந்த நேரம் அல்ல. மருத்துவ வசதி விரிவாக்கம், மருத்துவ வல்லுநர் கருத்து கேட்பு ஆகியவற்றுக்கு பிறகே தேர்தல் நடத்த வேண்டும். கரோனா சூழலை உச்சநீதிமன்றத்தில் தெரிவித்து, தேர்தல் பணிகளை நிறுத்த வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார். புதுச்சேரி யூனியன் பிரதேச உள்ளாட்சி நிர்வாக கட்டமைப்பில் புதுச்சேரி, உழவர்கரை, ஏனாம்,மாஹே, காரைக்கால் என 5 நகராட்சிகளும், வில்லியனூர், அரியாங்குப்பம், பாகூர், நெட்டப்பாக்கம், மண்ணாடிப்பட்டு, திருநள்ளார், திருமலைராஜன்பட்டினம் நிரவி, நெடுங்காடு, கோட்டுச்சேரி என 10 கொம்யூன் பஞ்சாயத்துகளும் உள்ளன. இவற்றில் மொத்தம் 98 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் முதன்முறையாக கடந்த 1968-ம்ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. பின்னர் 38 ஆண்டுகள் கழித்து, பல்வேறு கட்டப் போராட்டங்களுக்குப் பின் 2006-ல் உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. இப்பதவிக்காலம் முடிந்து கடந்த 13.7.2011-ல் இருந்து இப்பதவிகள் காலியாகவே உள்ளன.

புதுச்சேரியில் இதுவரை உள்ளாட்சித் தேர்தல் கடந்த 1968, 2006 என இருமுறை மட்டுமே நடந்துள்ளன. 2006-ல் மொத்தம் 1,138 பிரதிநிதிகள் தேர்வானார்கள். பதவி காலம் 2011-ல் முடிவடைந்து, 10 ஆண்டுகளாகியும் இதுவரை அடுத்த தேர்தல் நடத்தவில்லை.

உச்சநீதிமன்றம் புதுச்சேரியில் 6 மாதங்களுக்குள் தேர்தலை நடத்த உத்தரவிட்டது. அதன்படி,இரு மாதங்களில் தொகுதி மறுசீரமைப்பை செய்யவும், நான்குமாதங்களில் தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந் திரங்கள் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளைச் செய்யவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதற்கிடையே, புதுச்சேரியில் தற்போது உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இதன் ஒரு பகுதியாக புதுச்சேரி அரசு எல்லை மறு சீரமைப்பு வரைவு நகலை அரசிதழில் வெளியிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x