

கொடைக்கானல் மேல்மலைப் பகுதியில் உள்ள கிராமத்தில் மர்மக் காய்ச்சலால், அடுத்தடுத்து 4 முதியவர்கள் உயிரிழந்ததால் ஊர் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இக்கிராமத்துக்கு வெளிநபர்கள் வர மக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஊர் நுழைவு வாயிலில் தடுப்புகளை வைத்து மறைத்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல்மலைப் பகுதியில் கூக்கால், போளூர், கிளாவரை உள்ளிட்ட மலை கிராமங்களில் கடந்த சில நாட்களாக மர்மக் காய்ச்சலால் கிராம மக்கள் சிரமப்படுகின்றனர்.
இந்நிலையில், சுகாதாரத் துறையினர் 2 முறை முகாம்களை அமைத்து மாத்திரைகள் மட்டும் கொடுத்துள்ளனர்.
மேலும் கூக்கால் கிராமத்தில் சுகாதார நிலையம் இல்லாததால், பாதிக்கப்பட்டவர்கள் மன்னவனூர் ஆரம்ப சுகாதார நிலையம், கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டி உள்ளது. கரோனா ஊரடங்கால் மருத்துவமனைகளுக்குச் செல்ல முடியாத நிலையில் மேல் சிகிச்சைக்கு வழியின்றி தவிப்பதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
கூக்கால் கிராமத்தில் மட்டும் 50-க்கும் மேற்பட்டோர் மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கடந்த இரு நாட்களில் மட்டும் 4 முதியவர்கள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். இதனால் மலைகிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இதுகுறித்து அரசு மருத்துவர் அரவிந்தன் கூறுகையில், கூக்கால் உள்ளிட்ட கிராமங்களில் தொடர்ந்து மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. சாதாரண காய்ச்சல்தான். மக்கள் அச்சப்படத் தேவையில்லை. காய்ச்சல் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் கொடைக்கானல் கோட்டாட்சியரும் ஆய்வு மேற்கொண்டார். விரைவில் மருத்துவ முகாம்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்படும் என்றார்.