தென்காசி மாவட்டத்தில் தொடர் மழை: குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு

தென்காசி மாவட்டத்தில் பெய்த தொடர் மழை காரணமாக குண்டாறு அணை முழுமையாக நிரம்பியதால் அணைக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்பட்டது. (வலது) குற்றாலம் பிரதான அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
தென்காசி மாவட்டத்தில் பெய்த தொடர் மழை காரணமாக குண்டாறு அணை முழுமையாக நிரம்பியதால் அணைக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்பட்டது. (வலது) குற்றாலம் பிரதான அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
Updated on
1 min read

தென்காசி மாவட்டத்தில் தொடர் மழையால் குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குண்டாறு அணை முழுமையாக நிரம்பியதால் இந்த அணைக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்பட்டது.

தென்காசி மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்தது. இரவில் தொடர்ந்து மழை பெய்ததால் குளுமையான காலநிலை நிலவியது. குற்றாலம் பிரதான அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி ஆகியவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கரோனா பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் குற்றாலம் வெறிச்சோடி காணப்பட்டது.

நேற்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் தென்காசி மாவட்டத்தில் அதிகபட்சமாக அடவிநயினார் அணைப் பகுதியில் 60 மி.மீ. மழை பதிவானது. குண்டாறு அணையில் 39 மி.மீ., செங்கோட்டையில் 28 மி.மீ., கருப்பாநதி அணையில் 12 மி.மீ., ஆய்க்குடியில் 10.60 மி.மீ., சங்கரன்கோவிலில் 10 மி.மீ., சிவகிரியில் 9 மி.மீ., கடனாநதி அணையில் 6 மி.மீ. மழை பதிவானது.

நீர்ப்பிடிப்புப் பகுதியில் மழை பெய்ததால் அணைகளுக்கு நீர் வரத்து ஏற்படத் தொடங்கியுள்ளது. நேற்று கடனாநதி அணை நீர்மட்டடம் 65.40 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 49.50 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 52.50 அடியாகவும் இருந்தது. 36.10 அடி உயரம் உள்ள சிறிய அணையான குண்டாறு அணை நேற்று முழுமையாக நிரம்பியது. அணைக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்பட்டது. அடவிநயினார் அணை நீர்மட்டம் ஒரே நாளில் ஐந்தரை அடி உயர்ந்து 54 அடியாக இருந்தது.

பாபநாசத்தில் 83 மி.மீ.

திருநெல்வேலி மாவட்டத்தில் அதிகபட்சமாக பாபநாசம் அணைப்பகுதியில் 83 மிமீ மழை பதிவாகியிருந்தது. இதனால் அணைக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் பிறஇடங்களில் பெய்த மழையளவு (மி.மீட்டரில்):

சேர்வலாறு- 47, மணிமுத் தாறு- 12.04, நம்பியாறு- 36, கொடுமுடியாறு- 70, அம்பா சமுத்திரம்- 17, சேரன்மகாதேவி- 13, ராதாபுரம்- 81, நாங்குநேரி- 10, களக்காடு- 17.2, மூலக்கரைப்பட்டி- 20, பாளையங்கோட்டை- 9, திருநெல்வேலி- 7.

பாபநாசம் அணை நீர்மட்டம் பலத்த மழையால் நேற்று ஒரே நாளில் 7 அடி உயர்ந்து 119.60 அடியாக இருந்தது. 6,215 கனஅடி தண்ணீர் வருகிறது. 254 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. சேர்வலாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 10 அடி உயர்ந்து 135.30 அடியாக இருந்தது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 84.10 அடியாக இருந்தது. அணைக்கு 325 கனஅடி தண்ணீர் வருகிறது.

250 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது.

வடக்கு பச்சையாறு நீர்மட்டம் 42.49 அடியாகவும், நம்பியாறு நீர்மட்டம் 12.53 அடியாகவும், கொடுமுடியாறு நீர்மட்டம் 22 அடியாகவும் உயர்ந்திருந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in