Published : 27 May 2021 03:12 AM
Last Updated : 27 May 2021 03:12 AM

வருமானத்துக்கு அதிகமாக ரூ.7.54 கோடிக்கு சொத்து சேர்ப்பு; மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி, மனைவி மீது வழக்கு: வேலூர் லஞ்ச ஒழிப்பு பிரிவு காவல் துறையினர் நடவடிக்கை

வேலூர்

வேலூர் மாசு கட்டுப்பாட்டு வாரிய இணை தலைமை பொறியாளர் வீட்டில் இருந்து மூட்டைகளில் கட்டி வைத்திருந்த ரூ.3.60 கோடி பணம் பறிமுதல் செய்த வழக்கில் அவரும், அவரது மனைவியும் வருமானத்துக்கு அதிகமாக 7.54 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை சேர்த்ததாக இருவர் மீதும் வேலூர் லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

வேலூர் காட்பாடி காந்தி நகரில் தமிழ்நாடு மாசு கட்டுப் பாட்டு வாரியத்தின் மண்டல அலுவலகம் இயங்கி வருகிறது. இதன் கட்டுப்பாட்டில் வேலூர்,வாணியம்பாடி, திருவண்ணா மலை, விழுப்புரம், தருமபுரி, ஓசூர் உள்ளிட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இதன் இணை தலைமைப் பொறியாளராக பன்னீர்செல்வம் (57) என்பவர் கடந்த 2019-ம் ஆண்டு முதல் பணியாற்றி வந்தார். இவரது தலைமையில் மாதந்தோறும் நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் சிவப்பு பட்டியலில் இடம் பெற்ற தொழிற்சாலைகள் மற்றும் பிற தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்குவது தொடர்பான கோப்புகள் மீது லஞ்சப் பணம் பெற்ற பிறகே பன்னீர்செல்வம் கையெழுத்திட்டு வந்துள்ளார்.

இந்தப் புகாரின்பேரில் மண்டல மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் 13-ம் தேதி இரவு நடைபெற்ற மாதாந்திர ஆய்வுக் கூட்டத்தை வேலூர் லஞ்ச ஒழிப்புப் பிரிவு டிஎஸ்பி ஹேமசித்ரா தலைமையில் ஆய்வாளர்கள் விஜய், ரஜினி உள்ளிட்ட குழுவினர் ரகசியமாக கண்காணித்தனர்.கூட்டம் நிறைவுற்றதும் காரில் புறப்பட்ட பன்னீர்செல்வத்தை காவல் துறையினர் பின்தொடர்ந்து சென்றனர்.

காட்பாடி காந்திநகர் முனிசிபல் காலனியில் உள்ள வாடகை வீட்டுக்கு சென்ற பன்னீர்செல்வத்தை வழியில் சுற்றிவளைத்த லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் காரை சோதனையிட்டனர். காரில் இருந்து ரூ.2.25 லட்சம் பணம், உயர்ரக மதுபான பாட்டில்கள், அலுவலக கோப்புகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, அவர் தங்கியிருந்த வாடகை வீட்டில் சோதனையில் அங்கும் கட்டுகட்டாக பணம், உயர்ரக மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். நள்ளிரவு வரை நீடித்த சோதனையின் முடிவில், மொத்தம் ரூ.33.73 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

மூட்டைகளில் பணம் பறிமுதல்

இந்த சோதனையின் அடுத்த கட்டமாக ராணிப்பேட்டை பாரதி நகரில் உள்ள பன்னீர்செல்வத்தின் வீட்டில் மறுநாள் காலை (14-ம் தேதி) காலை லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல் துறையினர் சோதனை யிட்டனர். அங்குள்ள ஒரு அறையில் கோணிப்பை மூட்டைகளில் கட்டி வைத்திருந்த பணம், தங்க நகைகள், வெள்ளி பொருட்கள், சொத்து ஆவணங்களையும் பறிமுதல் செய்தனர். இதில், சோதனையில் ரூ.3.60 கோடி அளவுக்கு ரொக்கப் பணம், மூன்றரை கிலோ தங்கம், ஆறரை கிலோ வெள்ளிப் பொருட்கள், பல கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்களையும் பறிமுதல் செய்தனர்.

5 ஆண்டுகளில் சொத்து குவிப்பு

வேலூர் மற்றும் ராணிப்பேட்டை யில் நடைபெற்ற சோதனையைத் தொடர்ந்து அவர் மீது லஞ்சம் வாங்கியது குறித்து வழக்குப்பதிவு செய்தனர். அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின்போது பறிமுதல் செய்யப்பட்ட சொத்து ஆவணங்களின் அடிப்படையில் தனியாக விசாரணை நடத்தினர். அதில், திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகேயுள்ள அத்திமாஞ்சேரிபேட்டை கிராமத்தில் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர் பன்னீர்செல்வம். கடந்த 1990-ம் ஆண்டு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் இளநிலை பொறி யாளராக பணியில் சேர்ந்தவர் படிப்படியாக மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், இணை தலைமை பொறியாளராக பதவி உயர்வு பெற்றார்.

லஞ்ச வழக்கில் சிக்கியதால் கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி நிலவரப்படி பன்னீர்செல்வம் மற்றும் அவரது மனைவி புஷ்பா (51) ஆகியோரது பெயரில் உள்ள அசையும் அசையா சொத்துக்களின் மதிப்பு ரூ.77 லட்சத்து 93 ஆயிரத்து 996-ஆக இருந்தது. இந்த காலகட்டத்துக்குப் பிறகு 2020-ம் ஆண்டு அக்டோபர் 31-ம் தேதி முடிய காலகட்டத்தில் இருவரின் பெயரில் வாங்கப்பட்ட சொத்துக்கள் குறித்து ஆய்வு செய்தனர்.

இதில், பன்னீர்செல்வத்தின் அரசாங்க சம்பளத்தின் மூலம் கிடைத்த வருமானம் ரூ.1 கோடியே 14 லட்சத்து 3 ஆயிரத்து 200-ஆகஇருந்தது. ஆனால், அவர் ரூ.5 கோடியே 37 லட்சத்து 78 ஆயிரத்து 812 மதிப்பிலான சொத்துக்களை வாங்கியிருப்பதும், வருமானத்தை விட ரூ.2 கோடியே 17 லட்சத்து 3 ஆயிரத்து 340 செலவு செய் திருப்பதும் தெரியவந்தது.

இதன்மூலம் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததன் மதிப்பு ரூ.7 கோடியே 54 லட்சத்து 82 ஆயிரத்து 152 என தெரியவந்துள்ளது. இதையடுத்து, பன்னீர்செல்வம் மற்றும் அவரது மனைவி புஷ்பா ஆகியோர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வேலூர் லஞ்ச ஒழிப்பு பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x