

ஏரிகள், அணைகள் போன்ற நீர்நிலைகளை தூர்வாராததால் 400 டிஎம்சி நீர் வீணாக கடலில் கலப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து முன்னறிவிப்பின்றி ஒரே நேரத்தில் அதிக அளவு நீர் திறந்து விடப்பட்டதால் சென்னை மாநகரமே வரலாறு காணாத பேரழிவை சந்தித்துள்ளது. இப்படி அழிவு ஒருபக்கம் என்றால் மறுபக்கம் பெருமழை தந்த நீர் எதற்கும் பயன்படாமல் வீணாக கடலில் கலந்துள்ளது.
அணைகள், ஏரிகள், குளங்கள் போன்ற நீர்நிலைகளும், கால்வாய்களும் தூர்வாரி முறையாக பராமரிக்கப்படாததால் சுமார் 400 டிஎம்சி தண்ணீர் கடலில் கலந்து வீணாகியுள்ளது. தமிழகத்தில் உள்ள நீர்த்தேக்கங்களின் மொத்த கொள்ளளவில் மூன்றில் ஒரு பங்கு சேறும் சகதியுமாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆனால், இதுபற்றியெல்லாம் கவலைப்படாமல் செயலற்று இருக்கும் அதிமுக அரசுக்கு வரும் தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.
இவ்வாறு இளங்கோவன் கூறியுள்ளார்.