வேலூர் மாவட்டத்தில் 13 இடங்களில் நடைபெறும் சிறப்பு முகாம்களில் பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்: அமைச்சர் துரைமுருகன் வேண்டுகோள்

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று காய்கறி மற்றும் அத்தியாவசிய மளிகைப் பொருட்கள் விநியோகம் செய்யும் நடமாடும் வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்த அமைச்சர்கள் துரைமுருகன், காந்தி. அருகில், மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன், நாடாளுமன்ற உறுப்பினர் கதிர்ஆனந்த் உள்ளிட்டோர். படம்: வி.எம்.மணிநாதன்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று காய்கறி மற்றும் அத்தியாவசிய மளிகைப் பொருட்கள் விநியோகம் செய்யும் நடமாடும் வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்த அமைச்சர்கள் துரைமுருகன், காந்தி. அருகில், மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன், நாடாளுமன்ற உறுப்பினர் கதிர்ஆனந்த் உள்ளிட்டோர். படம்: வி.எம்.மணிநாதன்.
Updated on
2 min read

வேலூர் மாவட்டத்தில் 13 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருவதால் பொதுமக்கள் தாமதிக்காமல் உடனடியாக தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்வர வேண்டும் என அமைச்சர் துரைமுருகன் வேண்டு கோள் விடுத்துள்ளார்.

வேலூர் வணிகர் சங்க பேரமைப்பு, ஜெயின் சங்கம் சார்பில் 18 வயதுக்கு மேற்பட்டவர் களுக்கான தடுப்பூசி முகாமை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று தொடங்கி வைத்தார். இதற்கான நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன் தலைமை வகித்தார். கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, வேலூர் எம்பி., கதிர்ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்துப் பேசும் போது, ‘‘வேலூர் மாவட்டத்தில் கரோனாதடுப்பூசிகள் ஏற்கெனவே போடப் பட்டு வருகிறது. இந்நிலையில், 18 வயது முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்கள் 6 லட்சத்து 68 ஆயிரத்து 805 பேர் உள்ளனர். அவர்களுக்காக கடந்த 24-ம் தேதி முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முன்னுரிமை அடிப்படையில் தற்போது தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. வேலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் 7 இடங்களிலும், வணிகர் சங்கம், இந்திய செஞ்சிலுவை சங்கம், ரோட்டரிசங்கம், ஜெயின் சங்கம் உள்ளிட்ட தொண்டு நிறுவனங்கள் சார்பில் 6 இடங்கள் என மொத்தம் 13 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. எனவே, பொதுமக்கள் தங்களையும், தங்களது குடும்பத்தார் மற்றும் உறவினர்களை பாதுகாத்துக் கொள்ள தயக்கம் காட்டாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்’’ என்றார்.

இந்நிகழ்ச்சியில், உதவி ஆட்சியர் ஐஸ்வர்யா, மாநகராட்சி ஆணையர் சங்கரன், சுகதாரப் பணிகள் துணை இயக்குநர் மணிவண்ணன், நருவீ மருத்துவ மனை தலைவர் சம்பத், ஜெயின் சங்க தலைவர் ராஜேஷ் ஜெயின், செயலாளர் சுபாஷ்ஜெயின், தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு மாவட்டத்தலைவர் ஞானவேலு, செயலாளர் குமார் உட்பட பலர் உடனிருந்தனர்.

கூடுதல் காய்கறி வாகனங்கள்

கரோனா ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தால் வேலூர் மாவட்டத்தில் கூடுதலாக நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறி விற்பனை செய்ய மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது. இதைத்தொடர்ந்து, பொதுமக்கள் தேவைக்கான காய்கறி, பழ வகைகள் மற்றும் மளிகை பொருட்கள் ஆகியவற்றுடன் நடமாடும் வாகனங்களை அமைச்சர்கள் துரைமுருகன், ஆர்.காந்தி ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தார்.

இதற்கான நிகழ்ச்சி வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன் தலைமை வகித்தார். வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர்ஆனந்த், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கார்த்திகேயன் (வேலூர்), அமலு (குடியாத்தம்), ஜெகன்மூர்த்தி(கே.வி.குப்பம்), கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் திருகுணஐயப்பதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார், மகளிர் திட்ட அலுவலர் செந்தில் குமரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆட்சியர் சிவன் அருள் உத்தரவின் பேரில் 208 ஊராட்சிகளிலும் தற்போது ‘மாஸ் கிளீனிங்’ நடைபெற்று வருகிறது. மேலும், வீடு, வீடாக சென்று ஊராட்சிச் செயலாளர்கள் மற்றும் ஊரக வளர்ச்சித் துறையினர் காய்ச்சல், சளி, உள்ளிட்ட பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். தொற்று அறிகுறி லேசாக உள்ள வர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கிராமங்கள் தோறும் வரும் நடமாடும் வாகனங்கள் மூலம் பொதுமக்களுக்கு தேவையான காய்கறி, பால், பழம், உள்ளிட்ட உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது என ஊராட்சி களின் உதவி இயக்குனர் அருண் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in