

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) ஒரே நாளில் 1,298 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) 442 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் 700-ஐக் கடந்த பாதிப்பு, நேற்று 611 ஆகப் பதிவானது. இந்நிலையில், இன்றைய பாதிப்பு சற்று குறைந்து காணப்பட்டது. நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட 4,073 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 3 வாரங்களுக்குப் பிறகு நோய் பாதிப்பு 500க்குக் கீழ் குறைந்துள்ளது. அதேபோல மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. இதனால் கடந்த சில நாட்களாக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸில் நோயாளிகள் காத்திருந்த நிலைமையும் மாறி வருகிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 896 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளனர். சிகிச்சைப் பலன் அளிக்காமல் இதுவரை 661 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஊரடங்கு காரணமாக பாதிப்பு குறைந்துள்ளதாக மாவட்ட சுகாதாரத்துறையினர் தெரிவிக்கின்றனர். பொதுமக்கள் ஊரடங்கு விதிமுறைகளைக் கடைப்பிடித்தால் தொடர்ந்து பாதிப்பு குறையும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தற்போது கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருவதால் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆர்வமுடன் தடுப்பூசி போட்டு வருகின்றனர். தகுதியுள்ள அனைவரும் கட்டாயமாகத் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தி வருகிறது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 331 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் மொத்த பாதிப்பு 20,496 ஆக அதிகரித்துள்ளது. இதில், சிகிச்சையில் குணமடைந்து இன்று 772 பேர் வீடு திரும்பியுள்ளனர். நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட 4,332 பேர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 316 பேர் உயிரிழந்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 525 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தின் மொத்த பாதிப்பு 32,151 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சையில் குணமடைந்த 346 பேர் இன்று வீடு திரும்பினர். நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள 4,551 பேர் மருத்துவமனைகளில், சிறப்பு சிகிச்சை மையங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 367 பேர் உயிரிழந்துள்ளனர்.