

கரோனா நோய்த்தொற்றால் டாஸ்மாக் விற்பனையாளரும், அவரது மனைவியும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததைத் தொடர்ந்து அவர்களது 2 மகன்களும் ஆதரவில்லாமல் உள்ளனர். அந்தக் குழந்தைகளுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்து தர வேண்டும் என தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
வேலூர் மாவட்டம், தொரப்பாடி அடுத்த எழில் நகர் காமராஜர் 4-வது தெருவைச் சேர்ந்தவர் சிவராஜ் (45). இவர் காட்பாடி பகுதியில் உள்ள அரசு டாஸ்மாக் மதுக்கடையில் (கடை எண்:11264) விற்பனையாளராகப் பணியாற்றி வந்தார். இவர் மனைவி பாமா (38). இவர்களுக்கு இமான் (10) ஜோயல் (7) என 2 மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் காரணமாக அரசு மருத்துவமனைக்குச் சென்ற சிவராஜுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து, அவரது குடும்பத்தாருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டதில் அவரது மனைவி பாமாவுக்கும் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு அவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கணவன் - மனைவி இருவரும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 24-ம் தேதி சிகிச்சைப் பலனின்றி சிவராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, இன்று பாமாவும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, தாய்-தந்தையை இழந்த இமான் மற்றும் ஜோயல் ஆகிய 2 சிறுவர்களும் ஆதரவின்றித் தவிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
எனவே, பெற்றோரை இழந்து வாடும் குழந்தைகளின் கல்வி மற்றும் பாதுகாப்பு மறுவாழ்வுக்கு தமிழக அரசு உரிய உதவிகளைச் செய்ய வேண்டும் எனத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குத் தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கம் (ஏஐடியுசி) மாநிலத் தலைவர் நா.பெரியசாமி மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பியுள்ளார்.