வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் கருப்புக் கொடி ஏற்றி விவசாயிகள் போராட்டம்

 கோவை கருமத்தம்பட்டி அருகே, கருப்புக் கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்ட விவாசாயிகள்.
 கோவை கருமத்தம்பட்டி அருகே, கருப்புக் கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்ட விவாசாயிகள்.
Updated on
1 min read

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் விவசாயிகள் இன்று (மே 26) கருப்புக் கொடி ஏற்றிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசு கொண்டு வந்த, திருத்தப்பட்ட வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி, டெல்லியில் விவசாயிகள் அமைப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவு தெரிவித்தும், திருத்தப்பட்ட வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும், வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிய தமிழகத்தைச் சேர்ந்த விவசாயிகள் மீது கடந்த ஆட்சியில் போடப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவை மாவட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் இன்று (மே 26) வீடுகள், தோட்டங்களின் முன்பு கருப்புக் கொடி ஏற்றி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

கருமத்தம்பட்டியில் நடந்த போராட்டத்தில், கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சு.பழனிசாமி தலைமை வகித்தார். அதேபோல், மாவட்டத்தில் பேரூர், தொண்டாமுத்தூர், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, அன்னூர், சூலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் தங்களது வீடு, தோட்டங்களின் முன்பு கருப்புக் கொடி ஏற்றினர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட கூட்டமைப்பைச் சேர்ந்த பல்வேறு விவசாய சங்கத்தினர் பங்கேற்றனர். இவர்களுக்கு ஆதரவாக, கோவை மக்களவை உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், அனைத்துத் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக் குழுவினர் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

இது தொடர்பாக மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சு.பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘மாவட்டம் முழுவதும் லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களது, வீடு, தோட்டங்களில் கருப்புக் கொடி ஏற்றினர். அதைத் தொடர்ந்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் 600-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in