துப்புரவு தொழிலாளர்களின் மாற்று அணி சென்னை வருகை

துப்புரவு தொழிலாளர்களின் மாற்று அணி சென்னை வருகை

Published on

சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் தேங்கிய குப்பையால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உருவானது. இதை கருத்தில் கொண்டு, கடந்த 6-ம் தேதி சிறப்பு தூய்மைப் பணி தொடங்கப்பட்டது. இப்பணியில் சென்னை மாநகராட்சியைச் சேர்ந்த 25 ஆயிரம் துப்புரவு தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இப்பணிக்காக இதர மாவட்டங்களில் உள்ள 11 மாநகராட்சிகள் மற்றும் 23 நகராட்சிகளைச் சேர்ந்த துப்புரவு தொழிலாளர்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பேரூராட்சி துப்புரவு தொழிலாளர்கள் என மொத்தம் 10 ஆயிரம் பேர் வரவழைக்கப்பட்டு, குப்பை அகற்றும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.

இப்பணி குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “6-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை 75 ஆயிரத்து 326 டன் குப்பை அகற்றப்பட்டுள்ளது. இப்பணிக்காக வெளி மாவட்டங்களில் இருந்து மாற்று அணிகள் நேற்று வந்தன. அதனைத் தொடர்ந்து, ஏற்கெனவே பணியில் இருந்த 10-க்கும் மேற்பட்ட அணிகள் நேற்று சொந்த ஊர்களுக்கு புறப்பட்டன. சென்னையில் உள்ள குப்பை முழுமையாக அகற்றப்படும் வரை, வெளியூர் அணிகள் சென்னையில் பணியைத் தொடரும்” என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in