Published : 26 May 2021 05:58 PM
Last Updated : 26 May 2021 05:58 PM

தேவைப்பட்டால் முழு ஊரடங்கை நீட்டிக்க முடிவு: முதல்வர் ஸ்டாலின் பேட்டி

அனைத்துக் கட்சித் தலைவர்களையும் அழைத்து ஆலோசனை செய்தபோது, முதலில் ஒருவார காலம் ஊரடங்கைப் போடுவோம். தேவைப்பட்டால் இரண்டாவது வாரமும் அதை நீட்டிப்பது குறித்து ஆலோசனை செய்து முடிவெடுக்கலாம் என்று திட்டமிட்டுள்ளோம். தற்போது ஊரடங்கில் முழு திருப்தி வரவில்லை என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

திருவள்ளூர் மாவட்டம், நேமம், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை ஸ்டாலின் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அளித்த பதில்:

கோயம்புத்தூர் போன்ற மேற்கு மாவட்டங்களில் கரோனா தொற்று அதிகரித்து வருவது குறித்து?

மேற்கு மாவட்டங்களில் கொஞ்சம் அதிகரித்து இருக்கிறது. உண்மைதான். நான் மறுக்கவில்லை. சென்னைதான் முதலிடத்தில் இருந்தது. கோவை இரண்டாவது இடத்தில் இருந்தது. இப்போது சென்னையைப் பொறுத்தவரைக்கும் படிப்படியாகக் குறைந்து வந்து கொண்டிருப்பதை நீங்களே நேரடியாகப் பார்க்கிறீர்கள். கோவையைப் பொறுத்தவரைக்கும் குறைப்பதற்கான முயற்சிகளில் நாங்கள் ஈடுபட்டு இருக்கிறோம். தடுப்பதற்கான முயற்சிகளில் நாங்கள் ஈடுபட்டு இருக்கிறோம். அதற்கான பணிகள் வேகமாக நடைபெறுகின்றன.

திருவள்ளூர் மாவட்டத்தில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதிகள் குறைவாக இருப்பதாக வரும் செய்திகள் குறித்து?

ஆட்சிப் பொறுப்பேற்பதற்கு முன்பும், ஆட்சிப் பொறுப்பேற்ற நேரத்திலும் அந்தச் சூழ்நிலை இருந்தது. அதை மறுக்கவில்லை. அது இப்போது சரி செய்யப்பட்டு இருக்கிறது. இப்போது எங்கும் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை என்ற நிலைதான் இருக்கிறது. ஏதாவது குறிப்பிட்ட இடத்தில் இல்லை என்று சொன்னீர்கள் என்றால் நான் உடனடியாக நடவடிக்கை எடுக்கத் தயாராக இருக்கிறேன்.

தமிழகத்தில் நீட் தேர்வு நடத்த வாய்ப்பு இருக்கிறதா?

நாங்கள் ஏற்கெனவே தேர்தல் அறிக்கையிலே என்னென்ன தெரிவித்தோமோ அதை எல்லாம் நிறைவேற்றுகின்ற முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். கரோனா தொற்று மிகவும் அதிகமாகப் பரவி வருவதால் அந்தப் பணிகளில் முதலில் ஈடுபட்டு இருக்கிறோம். இதற்கு எல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு நீங்கள் சொன்னது போல் அந்தப் பணிகளை எல்லாம் விரைவிலே செய்வோம்.

திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள அம்மா உணவகங்கள் முறையாகச் செயல்படவில்லை என்றும், உணவு தயாரித்து நோயாளிகளுக்கு வழங்காமல் இருக்கிறது என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளதே?

எந்தக் குற்றச்சாட்டு இருந்தாலும் அதை உடனடியாகப் பரிசீலித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கையை நிச்சயம் எடுப்போம். இந்த ஆட்சியைப் பொறுத்தவரைக்கும் அரசியல் நோக்கத்தோடு எதையும் அணுகமாட்டோம். மக்கள் நலனை அடிப்படையாக வைத்துதான் அணுகுவோம் என்பதை உறுதியுடன் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுமா?

இந்த ஒரு வாரத்திற்கு எந்தத் தளர்வும் இல்லாமல் ஊரடங்கு போடப்பட்டு இருக்கிறது. ஏற்கெனவே அனைத்துக் கட்சித் தலைவர்களையும் அழைத்து ஆலோசனை செய்தபோது, முதலில் ஒருவார காலம் ஊரடங்கைப் போடுவோம். தேவைப்பட்டால் இரண்டாவது வாரமும் அதை நீட்டிப்பது குறித்து ஆலோசனை செய்து முடிவெடுக்கலாம் என்று முடிவெடுக்கப்பட்டது. இப்போதுள்ள நிலை ஓரளவுக்கு திருப்தியாக இருக்கிறது. இன்னும் முழு திருப்தி வரவில்லை. வந்த பிறகு அதை குறித்து யோசித்து முடிவு எடுப்போம்.

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பதிலளித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x