

தமிழகத்தில் சேவல் சண்டையை தடை செய்ய நடவடிக்கை எடுக்கும் படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.
மதுரை மாவட்டம் விராட்டிபத்து கிராமத்தில் நடக்கும் முனியாண்டி கோயில் திருவிழாவின்போது சேவல் சண்டை நடத்த அனுமதி வழங்குமாறு காவல் துறைக்கு உத்தரவிடக் கோரி எஸ்.கண்ணன் என்பவர், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.வைத்தியநாதன் ஆகியோர், தமிழகத்தில் சேவல் சண்டைக்கு தடை விதிப்பது தொடர்பாக மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பரிந்துரை செய்துள்ளனர். நீதிபதிகள் அளித்த தீர்ப்பில் கூறியுள்ளதாவது:
சண்டையில் ஈடுபடுத்தப்படும் சேவல்கள் ஒன்றுக்கொன்று எதிரி அல்ல. மனிதர்களின் ஏற்பாட்டில் தான் இரண்டு சேவல்களும் சண்டையிட்டுக் கொள்கின்றன. வீரியத்துடன் சண்டையிட வேண்டும் என்பதற்காகவும், எதிரி சேவலுக்கு காயத்தை உண்டாக்க வேண்டும் என்பதற்காகவும் சேவல்களுக்கு மதுபானம் கொடுக்கின்றனர். ஒரு சேவல் இன்னொரு சேவலை தாக்குவதை பார்த்து ரசித்து மகிழ் கின்றனர்.
ஒரு சேவல் இன்னொரு சேவலைத் தாக்கி காயப்படுத்தி, ரத்தம் சிந்த வைத்து, காயம் பட்ட சேவல் கடைசியில் உயிரி ழப்பதை தாக்கிய சேவலின் வெற்றி யாகவும், அதன் உரிமையாள ரின் வெற்றியாகவும் கொண்டாடு கின்றனர். மனிதத் தன்மை உள்ள யாரும் இத்தகைய குரூர மகிழ்ச்சியை விரும்ப மாட்டார்கள். இதுபோன்ற சண்டைகளைக் காணும் சிறுவர்களும் மற்றவர் களும் மனரீதியாக தவறாக வழிநடத் தப்பட்டு, வன்முறை பாதைக்குச் செல்ல வாய்ப்பிருக்கிறது.
மனிதர்களைப் போலவே விலங்குகளுக்கும், பறவை களுக்கும் சுதந்திரமாக வாழ்வதற் கான உரிமை உள்ளது. கடந்த 1960-ம் ஆண்டின் மிருக வதைத் தடுப்புச் சட்டத்தின் 11(ஏ) பிரிவானது எந்த மிருகத்துக்கும் எவ்வித வதையும் ஏற்படுத்துவதை தடை செய்கிறது.
ஆகவே, எல்லா உயிரினங்களை யும் கருணையுடன் நடத்த வேண்டிய அடிப்படை கடமை ஒவ்வொரு மனிதருக்கும் உள்ளது. தேவையின்றி எந்த உயிரினத்தையும் வதை செய்யவோ, காயம் ஏற்படுத்தவோ மனிதர்களில் யாருக்கும் உரிமை இல்லை.
ஏற்கெனவே ஜல்லிக்கட்டு நடத்த உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்தச் சூழலில், சமூகத்தின் ஒட்டுமொத்த நலன் களைக் கருத்தில் கொண்டு, சேவல் சண்டை, பிற விலங்குகள் மற்றும் பறவைகள் சண்டைகள் தடை செய்யப்பட வேண்டும். எனவே, சேவல் சண்டையை தடை செய்ய நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசுக்கு இந்த நீதிமன்றம் பரிந்துரை செய்கிறது.
இவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.