

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் சுவாமி கோயில் அருங்காட்சியகத்தில் உள்ள பழங்கால ஓலைச்சுவடிகளைக் கணினியில் பதிவேற்றம் செய்யும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, இந்து சமய அறநிலையத்துறை ஆளுகைக்குட்பட்ட கோயில்களில், நடைமுறையில் உள்ள பல்வேறு பதிவேடுகளையும், கோயில் பெயரில் உள்ள அசையும், அசையா சொத்துகளின் உரிமை ஆவணங்களையும் ஸ்கேன் செய்து இணையத்தில் பதிவேற்ற வேண்டும் என்றும், கோயில் நிலங்கள், கட்டிடங்களின் விவரங்கள் ஆகியவற்றைப் பொதுமக்கள் கணினி வழியாகப் பார்வையிடும் வகையில், புவிசார் குறியீடு செய்து இணையத்தில் வெளியிட வேண்டும் என்றும் அண்மையில் உத்தரவிட்டிருந்தார்.
திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் கோயில் அருங்காட்சியகத்தில் அந்தக் கோயில் மட்டுமின்றி, அதன் உப கோயில்களான ஸ்ரீரங்கம் காட்டழகிய சிங்கர் கோயில், உறையூர் கமலவள்ளி நாச்சியார் கோயில், அன்பில் சுந்தரராஜ பெருமாள் கோயில், அன்பில் பிரம்மபுரீஸ்வரர் கோயில், அன்பில் மாரியம்மன் கோயில், திருவெள்ளறை புண்டரிகாட்ச பெருமாள் கோயில் ஆகியவற்றின் ஆவணங்களும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், கோயில் அருங்காட்சியகத்தில் உள்ள அனைத்து ஓலைச்சுவடிகளையும் கேமராவில் ஒளிப்பதிவு செய்து, கணினியில் பதிவேற்றம் செய்யும் பணி இன்று (மே 26) தொடங்கி நடைபெற்று வருகிறது.
இது தொடர்பாக, கோயில் இணை ஆணையர் செ.மாரிமுத்து, 'இந்து தமிழ் திசை' நாளிதழிடம் கூறுகையில், "ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், அதன் உப கோயில்கள் ஆகியவற்றின் அனைத்து சொத்து விவரங்களும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இதனிடையே, கோயிலில் உள்ள பழங்கால ஓலைச்சுவடிகளை கேமராவில் ஒளிப்பதிவு செய்து கணினியில் பதிவேற்றம் செய்யும் பணி இன்று தொடங்கியது.
சுந்தரகாண்டம், பாகவதம், ஸ்ரீபாகவதம், பெரியாழ்வார் திருமொழி வியாக்கியானம், துலா காவிரி புராணம் ஆகிய 5 தலைப்புகளில், ஒவ்வொரு தலைப்பிலும் தலா சுமார் 250 ஓலைச்சுவடிகள் 6 கட்டுகளாக உள்ளன. ஓலைச்சுவடிகள் பெரும்பாலானவை பழங்காலத் தமிழ் எழுத்துகளாலும், சில தெலுங்கு மொழியிலும் பொறிக்கப்பட்டுள்ளன. ஓலைச்சுவடிகள் மிகவும் பழமையானவை என்பதால், அவை சேதமடைந்துவிடாமல் கணினியில் பதிவேற்றம் செய்யும் பணியில் கோயில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்" என்றார்.