Published : 26 May 2021 04:45 PM
Last Updated : 26 May 2021 04:45 PM

உலகளாவிய டெண்டர்; தமிழகத்திலேயே தயாரிப்பு மூலம் தடுப்பூசி தட்டுப்பாடு நீங்கும்; மாபெரும் இயக்கமாக நடத்த உள்ளோம்: முதல்வர் ஸ்டாலின் பேட்டி

தடுப்பூசி நெருக்கடியைச் சமாளிப்பதற்காகத்தான் குளோபல் டெண்டர் உலகளாவிய ஒப்பந்தப் புள்ளிகளை வெளியிட்டு இருக்கிறோம். நேரடியாகத் தடுப்பூசியை வாங்க இருக்கிறோம். அதேபோல தமிழ்நாட்டிலேயே தடுப்பூசியைத் தயாரிக்கவும் திட்டமிட்டு இருக்கிறோம், இதன் பின்னர் மாபெரும் தடுப்பூசி இயக்கமாக நடத்த உள்ளோம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

திருவள்ளூர் மாவட்டம், நேமம், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை ஸ்டாலின் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

''நேற்று செங்கல்பட்டு மாவட்டத்தில் இருக்கும் எச்.எல்.எல். பயோடெக் நிறுவனத்தின் தடுப்பூசி ஆய்வகத்தை ஆய்வு செய்தேன். இன்று காலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கக்கூடிய ஆக்சிஜன் களன் (oxygen plant) அமைந்துள்ள ஐநாக்ஸ் நிறுவனத்தை ஆய்வு செய்தேன். அதனைத் தொடர்ந்து எச்.எல்.எல். பயோடெக் நிறுவனத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியைத் தொடங்கி வைத்தேன். இப்போது திருவள்ளூர் மாவட்டம், நேமம் கிராமத்தில், ஊரகப் பகுதிகளில் தடுப்பூசி போடக்கூடிய பணிகளைத் தொடங்கி வைத்தேன்.

கரோனா தொற்றை நாம் வெல்ல வேண்டும் என்று சொன்னால், மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். அதற்கான விழிப்புணர்வைத் தமிழ்நாடு அரசு முனைப்பாகச் செய்து கொண்டிருக்கிறது. அனைவருக்கும் தடுப்பூசி கொடுக்கக்கூடிய பணியைப் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அலுவலர்களையும், அதேபோல அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களையும் நான் அறிவுறுத்திக் கொண்டு இருக்கிறேன்.

அதன் அடிப்படையில்தான் நானே இன்று நேரடியாக இந்தப் பகுதிக்கு வந்து, குறிப்பாக ஊரகப் பகுதிகளில் தொடங்கி வைத்து இருக்கிறேன் என்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள். கரோனா தொற்றைப் பரவாமல் தடுப்பது, தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பவர்களைக் காப்பது, இந்த இரண்டு இலக்கோடு தமிழக அரசு முழு மூச்சோடு செயல்பட்டு வருகிறது. தொற்றைத் தடுப்பதற்கு அந்நோய் பரவக்கூடிய சங்கிலியை நாம் உடைத்தாக வேண்டும்.

இதற்காகத்தான் முழு ஊரடங்கு போடப்பட்டு இருக்கிறது. இந்த முழு ஊரடங்கை எந்தத் தளர்வும் இல்லாமல் போட்ட காரணத்தினால்தான் இந்த இரண்டு நாட்களாக நீங்களும் பார்த்திருப்பீர்கள். ஒரு சில பயன் இன்றைக்கு வந்து கொண்டு இருக்கிறது. அதை நம்முடைய மருத்துவ வல்லுநர்கள் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.

சென்னை உள்ளிட்ட நகரங்களில் கரோனா தொற்றுப் பரவல் படிப்படியாகக் குறைந்து வந்து கொண்டு இருக்கிறது. இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் இது முழுப் பலனைத் தரும் என்ற நம்பிக்கை எங்களுக்கு வந்திருக்கிறது. மக்கள் அனைவரும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை முழுமையாகக் கடைப்பிடித்து வீட்டிலேயே இருக்க வேண்டும்.

அவசியம் இல்லாமல் வெளியே வரக்கூடாது என்று உங்களை எல்லாம் நான் விரும்பி வேண்டிக் கேட்டுக்கொள்ளக் கடமைப்பட்டு இருக்கிறேன். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்றுவதற்காக ஏராளமான மருத்துவ உட்கட்டமைப்பு வசதிகளை நம்முடைய தமிழ்நாடு அரசு செய்து இருக்கிறது, தொடர்ந்து செய்துகொண்டு வருகிறது.

புதிய படுக்கை வசதிகளை உருவாக்கி இருக்கிறோம். ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லாத ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தி வந்திருக்கிறோம். போதுமான அளவு படுக்கைகள் இப்போது தயார் நிலையில் உள்ளன. ஆக்சிஜன் வசதிகளும் போதுமான அளவு இருக்கிறது என்ற நிலைமையை அரசு உருவாக்கி இருக்கிறது. எத்தகைய சூழ்நிலைகளையும் எதிர்கொள்ளக் கூடிய நிலையில் இன்றைய அரசு இயங்கிக் கொண்டு இருக்கிறது என்பது உங்களுக்கு எல்லாம் நன்றாகத் தெரியும்.

இந்த கரோனாவிலிருந்து மக்களைக் காப்பதில் மிக மிக முக்கியம் தடுப்பூசிதான். இதுதான் மிக மிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது. 16.1.2021 அன்று தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. தொடங்கப்பட்ட நாளிலிருந்து இதுவரை இல்லாத அளவிற்கு நேற்றைக்கு மட்டும் 2,24,544 பேர் தடுப்பூசி போடப்பட்டு இருக்கிறது.

தடுப்பூசி போடப்படும் பணி தொடங்கிய நாள் முதல் மே 7 வரை சராசரியாக ஒரு நாளைக்கு 61,000 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இந்த அரசு பொறுப்பேற்றதற்குப் பிறகு, சராசரியாக ஒரு நாளைக்கு 78,000 தடுப்பூசிகள் போடப்பட்டு வந்தன. இந்த அரசு பொறுப்பேற்பதற்கு முன்பு சராசரியாக 6 விழுக்காடு அளவில் இருந்த தடுப்பூசி வீணடிப்பு (wastage) கடந்த இரண்டு வாரங்களில் ஒரு விழுக்காடாகக் குறைத்திருக்கிறோம்.

44 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மத்திய அரசு வழங்கி வரும் தடுப்பூசிகளில் தற்போது 3 லட்சத்து 14 ஆயிரம் தடுப்பூசிகள் கையிருப்பு இருக்கிறது. எனவே, தமிழ்நாட்டின் தடுப்பூசி ஒதுக்கீட்டை உயர்த்த வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து ஒன்றிய அரசை வலியுறுத்திக் கொண்டு இருக்கிறோம்.

18 வயதிலிருந்து 44 வயதுக்குள் இருக்கிறவர்களுக்குத் தமிழ்நாடு அரசு வாங்கக்கூடிய தடுப்பூசிகளைப் பொறுத்தவரைக்கும் ஏற்கெனவே பெறப்பட்டுள்ள 12.85 லட்சம் தடுப்பூசிகளையும், அடுத்துப் பெறவுள்ள 11.50 லட்சம் தடுப்பூசிகளையும் முழுமையாகப் பயன்படுத்தி தொற்று அபாயம் அதிகமாக உள்ளவர்களுக்கும், பெரிய தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் தடுப்பூசி போடுவதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெறுகின்றன.

ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைகளைப் பொறுத்தவரைக்கும் தற்போது தமிழ்நாட்டில் 267 பரிசோதனை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. அரசு மருத்துவமனைகளில் உள்ள பரிசோதனை மையங்களில் பரிசோதனைத் திறனை உயர்த்துவதற்குத் தேவையான கருவிகள் கூடுதலாக வாங்கப்பட்டு பரிசோதனை எண்ணிக்கை பெருமளவு உயர்த்தப்பட்டு இருக்கிறது.

இந்த அரசு பொறுப்பேற்பதற்கு முன்பு இருந்த ஒரு மாத காலத்தில், அதாவது ஏப்ரல் 8 முதல் மே 7 வரை சராசரியாக 1.15 லட்சம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த அரசு பொறுப்பேற்றது முதல் இதுவரை நாள் ஒன்றுக்கு சராசரியாக 1.64 லட்சம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதாவது நாள்தோறும் சுமார் 50,000 பரிசோதனைகள் கூடுதலாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தக் காலகட்டத்தில் நாள்தோறும் நமது நாட்டிலேயே அதிகபட்ச அளவில் ஆர்டிபிசிஆர் பரிசோதனைகளை தமிழ்நாடுதான் அதிக அளவு மேற்கொண்டு வருகிறது. தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வர வேண்டும் என்று உங்கள் மூலமாக மக்களை எல்லாம் கேட்டுக்கொள்ளக் கடமைப்பட்டு இருக்கிறேன். தடுப்பூசிதான் இன்றைக்கு நமது காவல்காரனாக விளங்கிக் கொண்டு இருக்கிறது. தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு மக்கள் எந்தக் காரணத்தைக் கொண்டும் தயங்க வேண்டாம்.

நானே தடுப்பூசி போட்டுக் கொண்டேன். தடுப்பூசி போட்டுக் கொள்வதால் என்ன பயன் என்று கேட்டீர்கள் என்றால் ஒருவேளை கரோனா தொற்று தாக்கினாலும் அதனால் ஒரு பெரிய பாதிப்பு ஏற்பட நிச்சயம் வாய்ப்பில்லை. நிச்சயமாக இருக்காது. எளிதாகத் தொற்றை வெல்லலாம் என்று மருத்துவ நிபுணர்கள் சொல்லி இருக்கிறார்கள். அதனால் பொதுமக்கள் தானாக முன்வந்து தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று நான் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி, வற்புறுத்தி, கெஞ்சி கேட்டுக்கொள்ளக் கடமைப்பட்டு இருக்கிறேன்.

தமிழகத்திற்குப் போதுமான அளவிற்கு ஒன்றிய அரசு தடுப்பூசியை வழங்கி இருக்கிறதா என்று கேட்டால், தமிழகத்திற்கு மட்டுமல்ல, இந்தியாவில் பல்வேறு மாநிலங்களும் இதே நெருக்கடியைத்தான் இன்றைக்கு எதிர்கொண்டு இருக்கிறது. இந்த நெருக்கடியைச் சமாளிப்பதற்காகத்தான் தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக்கும் நாம் ஏற்கெனவே குளோபல் டெண்டர் உலகளாவிய ஒப்பந்தப் புள்ளிகளை வெளியிட்டு இருக்கிறோம். நேரடியாகத் தடுப்பூசியை வாங்க இருக்கிறோம். அதேபோலத் தமிழ்நாட்டிலேயே தடுப்பூசியைத் தயாரிக்கவும் திட்டமிட்டு இருக்கிறோம்.

அதனால்தான் நேற்றைய தினம் செங்கல்பட்டில் இருக்கக்கூடிய ஒன்றிய அரசின் நிறுவனத்திற்கு நேரடியாக நானே சென்று பார்வையிட்டேன். அங்கே உருவாக்கப்பட்டு இருக்கக்கூடிய தொழிற்சாலை என்ன நிலையில் இருக்கிறது என்று பார்த்தீர்கள் என்றால் முடக்கி வைக்கப்பட்டு இருக்கிறது. அதைச் செயல்படுத்த அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசு செய்ய இருக்கிறது.

அதற்கான ஆலோசனைகளை நாங்கள் தொடர்ந்து செய்து, ஒன்றிய அரசை நாங்கள் வலியுறுத்த இருக்கிறோம். தமிழக மக்கள் அனைவருக்கும் தேவையான அளவிற்கு தடுப்பூசி இன்னும் சில மாதங்களில் பெற்றவுடன் தடுப்பூசி போடுவதை ஒரு மக்கள் இயக்கமாகவே, ஒரு மாபெரும் இயக்கமாகவே நடத்துவதற்குத் திட்டமிட்டு இருக்கிறோம். அப்பொழுது அனைவரும் முன்வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று நான் மீண்டும் மீண்டும் கேட்டுக்கொள்கிறேன்.

முதல் அலையைப் பொறுத்தவரைக்கும் முற்றிலுமாக அதைத் தடுத்து முற்றுப்புள்ளி வைக்காததன் விளைவுதான் இந்த இரண்டாவது அலை ஏற்படுவதற்குக் காரணமாக இருக்கிறது. இந்த இரண்டாவது அலையை நாம் முற்றிலுமாக ஒழித்து அதிலே வெற்றி காண்போம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்பதை இந்த நேரத்திலே மக்களுக்குத் தெரிவித்துக்கொள்ள நான் கடமைப்பட்டு இருக்கிறேன்”.

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x