10 ஆயிரம் மலர்களைக் கொண்டு முகக் கவசம், தடுப்பூசி அலங்காரம்: கொடைக்கானலில் நூதன கரோனா விழிப்புணர்வு 

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் விழிப்புணர்வுக்காக மலர்களால் வடிவமைக்கப்பட்டிருந்த முகக்கவசம், தடுப்பூசி, கரோனா வைரஸ் மாதிரிகள்.
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் விழிப்புணர்வுக்காக மலர்களால் வடிவமைக்கப்பட்டிருந்த முகக்கவசம், தடுப்பூசி, கரோனா வைரஸ் மாதிரிகள்.
Updated on
1 min read

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் கரோனா விழிப்புணர்வாக தடுப்பூசி செலுத்துவது, முகக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி 10,000 மலர்களைக் கொண்டு கரோனா வைரஸ், தடுப்பூசி, முகக்கவசம் ஆகியவை வடிவமைக்கப்பட்டுள்ளது. இவற்றைக் காண சுற்றுலாப் பயணிகள் இல்லாத நிலையிலும் புகைப்படங்கள், வீடியோ எடுத்து சமூக வலைதளங்கள் மூலம் இந்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் கரோனா இரண்டாவது அலை காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் நடைபெறும் கோடை விழா, மலர்க் கண்காட்சி ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளன.

இருந்தபோதும் முன்னதாக மலர்க் கண்காட்சிக்காகப் பராமரிக்கப்பட்ட மலர்கள் செடிகளில் பூத்துக் குலுங்குகின்றன. இதனால் மலர்களைக் கொண்டு கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தப் புதிய முயற்சி மேற்கொண்ட தோட்டக்கலைத் துறையினர், பிரையண்ட் பூங்காவில் கரோனா வைரஸ் பாதிப்பை, தடுப்பூசி மூலம் தவிர்க்கமுடியும் என்பதை மக்களுக்கு உணர்த்தும் விதமாக கரோனா வைரஸ் மாதிரி மற்றும் தடுப்பூசி, முகக்கவசம் ஆகியவற்றை மலர்களால் வடிவமைத்திருந்தனர்.

இதற்குக் கொய் மலர்களான ஆஸ்ட்ரோ மேரியா, கோரியாப்சிஸ், ஹைட்ரேஞ்சியா, அகபந்தஸ் ஆகிய வகை மலர்கள் உள்ளிட்ட 10,000க்கும் மேற்பட்ட மலர்களைக் கொண்டு தடுப்பூசி, முகக்கவசம் உள்ளிட்டவை வடிவமைக்கப்பட்டிருந்தது.

இந்த மலர் அலங்கார விழிப்புணர்வு 20க்கும் மேற்பட்ட பணியாளர்களைக் கொண்டு இரண்டு நாட்களில் உருவாக்கப்பட்டது. இந்த மலர் அலங்காரத்தைக் காண சுற்றுலாப் பயணிகள், பொதுமக்களுக்கு அனுமதியில்லாததால் இதைப் புகைப்படங்கள், வீடியோவாக எடுத்து வலைதளங்களில் விழிப்புணர்வுக்காகப் பரப்பி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in