Last Updated : 26 May, 2021 03:12 AM

 

Published : 26 May 2021 03:12 AM
Last Updated : 26 May 2021 03:12 AM

கரோனா பரிசோதனைகள்: ஏன்? எப்படி? எப்போது?

நாட்டில் தமிழகம் உள்ளிட்ட பலமாநிலங்களில் கரோனா பாதிப்பும் உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முதலாம் அலையில் தப்பித்த நம் தேசம், இரண்டாம் அலையில்சிக்கி ‘மூச்சுவிட’ திணறிக் கொண்டிருக்கிறது. அதேநேரம் முதல் அலையில் அதிகபாதிப்பை எதிர்கொண்ட உலக நாடுகள்பலவும் இரண்டாம் அலையில் விழித்துக்கொண்டன. முக்கியமாக, சீனா, தென்கொரியா போன்ற நாடுகள் ‘டி3’ சூத்திரத்தைப் பயன்படுத்தி முதல் அலையைக் கட்டுப்படுத்தினர்.

‘டி3’ என்பது ‘டெஸ்டிங்’, ‘டிராக்கிங்’ மற்றும் ‘டிரேசிங்’ என்பதன் சுருக்க வடிவம்.வீடு தேடிச்சென்று அனைவருக்கும் பரிசோதனை செய்வது, பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டால்,அந்த நபரையும் அவரோடு தொடர்புகொண்டவர்களையும் கட்டாயமாகத் தனிமைப்படுத்துவது, தொற்றாளர் கடந்த 2வாரங்களில் எங்கெல்லாம் சென்றார் என்பதைக் கண்டறிந்து அவரோடு பயணித்த,அவரைச் சந்தித்த நபர்களையும் தனிமைப்படுத்துவது போன்ற வழிமுறைகளைக் கடுமையாகக் கடைபிடித்ததால், அந்த நாடுகளில் இரண்டாம் அலை தோன்ற வில்லை.

நம் நாட்டிலும் இதுபோல் பரிசோதனைகளையும் தனிமைப்படுத்துதலையும் அதிகரித்தால் இப்போது மக்களை சின்னாபின்னமாக்கும் இரண்டாம் அலையைக் கட்டுப்படுத்த முடியும் என்பது வல்லுநர்களின் கருத்து. இதன் அடிப்படையில் கரோனா பரிசோதனைகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து பொதுச்சமூகம் சிகிச்சைக்குத் தயாராவது நல்லது.

‘ஆர்.டி.பி.சி.ஆர்’ பரிசோதனை

கரோனா தொற்றை உறுதி செய்யும் முக்கியமான சளிப் பரிசோதனை ‘ஆர்.டி.பி.சி.ஆர்’ சோதனையாகும். கரோனா அறிகுறிகள் தோன்றத் தொடங்கிய 3-ம் நாளில் இதைமேற்கொள்ள வேண்டும். இதில் ‘தொற்று இல்லை’ என்று முடிவு வந்து, அறிகுறிகள் அதிகமானால், அடுத்த 2 நாட்கள் கழித்து மறுபடியும் இதை மேற்கொள்ள வேண்டும்.தொற்றாளருடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களுக்கு அறிகுறிகள் இல்லாவிட்டால் ஒரு வாரம் தனிமைப்படுத்திக்கொண்டு 8-ம் நாளில் ‘ஆர்.டி.பி.சி.ஆர்’ பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.

தொற்று உறுதியானவர்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று, ஆரம்பக்கட்ட மாத்திரைகளைப் பெற்றுக்கொண்டு தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அடுத்த 2 வாரங்களுக்கு தங்கள் ஆக்ஸிஜன் செறிவு அளவை (SpO2) பல்ஸ் ஆக்ஸிமீட்டரில் தினமும் 4 முறை பரிசோதித்து வர வேண்டும். 6 நிமிட நடைப்பயிற்சிக்குப் பிறகு அது95%க்கு மேல் இருந்தால் சரியான அளவு.

அறிகுறிகள் ஒவ்வொன்றாக குறைந்து, ஆக்ஸிஜன் செறிவு தொடர்ந்து 95%க்கு மேல் இருந்தால், கரோனா தொற்றிலிருந்து விடுபடுவதாக அறியலாம். இவர்கள் 2 வாரங்களுக்குப் பிறகு தனிமையிலிருந்து விடுபடலாம்.

வீட்டில் தனி அறையும், தனிக் கழிப்பிட வசதியும் இருப்பவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளலாம். அல்லாதவர்கள் அரசு கரோனா மையங்களுக்குச் செல்லலாம். வீட்டில் இருந்தாலும் கரோனா மையங்களில் இருந்தாலும் ஆக்ஸிஜன் செறிவு 95%க்குக் கீழ் குறைந்தால் உடனே அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும்.

‘துரித ஆன்டிஜென்’ பரிசோதனை (RAT)

இது மிக எளிமையான, துரிதமான பரிசோதனை. ‘ஆர்.டி.பி.சி.ஆர்’ பரிசோதனைக்கு வசதி இல்லாத ஊர்களிலும், கரோனா அதிக அளவில் பரவும் பகுதிகளிலும் (உதாரணமாக, கிராமங்கள், மலைப்பிரதேசங்கள், தொழிற்சாலைகள்) தொற்றாளர்களை உடனடியாக தனிமைப்படுத்துவதற்கு இந்தத் துரித பரிசோதனை உதவுகிறது.

கரோனா அறிகுறிகள் தோன்றத் தொடங்கிய 3-ம் நாளில் இதை மேற்கொள்ள வேண்டும். ரத்தத்தில் கரோனா ‘எதிரணுயூக்கி’ (Antigen) இருக்கிறதா என்பதைத் தெரிவிக்கும் பரிசோதனை இது. இதன் முடிவு உடனே தெரிந்துவிடும். தொற்று இருப்பது உறுதியானால் உடனே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அடுத்த 2 வாரங்களுக்கு தங்கள் ஆக்ஸிஜன் செறிவை தினமும் 4 முறை பரிசோதித்துவர வேண்டும்.

இதிலுள்ள ஒரு குறை என்னவென்றால், தொற்று உள்ளவர்களுக்கும் சமயங்களில் இது ‘தொற்று இல்லை’ என்று தவறான முடிவைக் காட்டிவிடும். அப்போது தொற்றாளர்களுக்கு அறிகுறிகள் தொடருமானால் ‘ஆர்.டி.பி.சி.ஆர்’ பரிசோதனையையும் மேற்கொள்ள வேண்டும்.

ரத்தப் பரிசோதனைகள்

அடுத்து, ‘சிபிசி’ (CBC - Complete BloodCount) எனும் ரத்தப் பரிசோதனை முக்கியம்.அதில் வெள்ளையணுக்களின் மொத்த எண்ணிக்கை (TC) 4,000-க்குக் குறையாமலும் நிண அணுக்களின் (Lymphocytes) எண்ணிக்கை 20%க்கும் அதிகமாகவும் இருக்க வேண்டும்.

மேலும், ‘சி.ஆர்.பி’ (CRP - C Reactive Protein) எனும் ரத்தப் பரிசோதனையும் அவசியம். இது கல்லீரலில் சுரக்கும் ஒரு புரதம்.உடல் அழற்சி நிலைகளில் இது அதிகரிக்கும். பொதுவாக, இது 6மி.கி/டெ.லி.க்குக் குறைவாக இருக்க வேண்டும்.

பாதிப்பு மிதமான நிலையில் உள்ளவர்களுக்கு ‘சி.ஆர்.பி’ பரிசோதனையை 72 மணி நேரத்துக்கு ஒரு முறையும், தீவிரமான நிலையில் உள்ளவர்களுக்கு 48 மணி நேரத்துக்கு ஒரு முறையும் மறுபடியும் பரிசோதிக்க வேண்டும். கரோனா பாதிப்பு குறைகிறதா, கடுமையாகிறதா என்பதை அறிய இதுஉதவும். இது முதலில் இருந்ததைவிடப் படிப்படியாகக் குறைந்து வருகிறது என்றால் அல்லது தொடர்ந்து 6-க்குக் கீழ் இருந்தால் தொற்றாளர் பாதிப்பிலிருந்து விடுபடுகிறார் என்று பொருள்.

அடுத்து ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். தொற்றாளர்களுக்கு மூச்சுத்திணறல் வருவது கரோனா கிருமியால் அல்ல. உடலில் கிருமிக்கு எதிரான போராட்டத்தில் ‘சைட்டோகைன் புயல்’ எனும் தடுப்பாற்றல் மிகைச் செயல்பாடு நிகழ்கிறது. அதன் காரணமாக நுரையீரல் திசுக்கள் பாதிக்கப்படுகின்றன. ரத்த உள் உறைவு, பிற பாக்டீரியா தொற்றுகள் உள்ளிட்ட ஆபத்துகளும் அந்த நேரத்தில் ஏற்படுகின்றன. அப்போதுதான் மூச்சுத்திணறல் உண்டாகிறது.

மிதமான மற்றும் தீவிரமான தொற்றாளர்களுக்கு ரத்தத்தில் சில ‘அழற்சிக் குறிப்போன்’(Inflammatory markers)கள் அதிகரிக்கும். அவற்றை அளக்க பரிசோதனைகள் தேவைப்படும். முக்கியமாக, LDH, D-Dimer, IL6, Ferritin, PCT பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். நீரிழிவு, சிறுநீரக நோய் போன்றதுணை நோய்கள் உள்ளவர்களுக்கு ரத்தச் சர்க்கரை, யூரியா, க்ரியேட்டினின் உள்ளிட்ட பரிசோதனைகள் தேவைப்படும்.

சி.டி.ஸ்கேன் பரிசோதனை

மருத்துவரின் ஆலோசனைப்படி, கரோனா தொற்றின் அறிகுறிகள் ஆரம்பித்த 5 முதல் 7 நாட்களுக்குள் சி.டி. ஸ்கேன் எடுப்பது சரியாக இருக்கும். ‘ஆர்.டி.பி.சி.ஆர்’பரிசோதனையில் தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டவர்கள் அனைவரும்இந்தப் பரிசோதனையை மேற்கொண்டுவிடுவது நல்லது. அதேவேளையில், ‘ஆர்.டி.பி.சி.ஆர்’ பரிசோதனையில் ‘தொற்று இல்லை’என்று முடிவு வந்தாலும் அறிகுறிகள் நீடித்தால், சி.டி. ஸ்கேன் எடுப்பது அவசியப்படும். ‘சி.ஆர்.பி’ செறிவு 6-க்கு மேல் உள்ளவர்கள், மொத்த வெள்ளையணுக்கள் 4,000-க்குக் கீழ் உள்ளவர்கள், நிண அணுக்கள் 20%க்குக் கீழ் உள்ளவர்கள், கரோனா அறிகுறிகள் இருந்தால் சி.டி. ஸ்கேன் எடுத்துக் கொள்வது நல்லது.

கரோனா தொற்று நுரையீரலைப் பாதித்துள்ளதா என்பதையும், பாதிப்பு எந்தப் படிநிலையில் (Stage) உள்ளது என்பதையும் சி.டி.ஸ்கேனில் ஆரம்பத்திலேயே தெரிந்துகொள்ளலாம். இந்த நேரத்தில் ஸ்கேன் எடுக்கத் தவறியவர்களுக்கு பாதிப்பானது மிதமான அல்லது தீவிரமான நிலைகளுக்குச் சென்று விட்டாலோ, ஆக்ஸிஜன் செறிவு 90 – 94% இருந்தாலோ ஸ்கேன் தேவைப் படும். இது அவர்களுக்கு சிகிச்சை வகையைத் தீர்மானிக்க உதவும்.

தவிரவும், ‘ஆர்.டி.பி.சி.ஆர்’ பரிசோதனைக்கு வசதி இல்லாத இடங்களில் ஆரம்பநிலை தொற்றாளர்களுக்கும் சி.டி.ஸ்கேன்தேவைப்படும். அவசர அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டியிருந்தால், பயனாளிக்கு கரோனா பாதிப்பு உள்ளதா என்பதைஉடனடியாக அறிய ஸ்கேன் எடுக்கப்படும். கரோனா போல் தோற்றமளிக்கும் பிற தொற்றுகளையும் இதய பாதிப்புகளையும் அறிய இது அவசியப்படும். கரோனா அறிகுறிகள் இல்லாதவர்களுக்கும் கரோனாவிலிருந்து முழுமையாக குணமானவர்களுக்கும் இது தேவையில்லை.

‘ஆன்டிபாடி’ பரிசோதனை

ஒருவரின் ரத்தத்தில் கரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறதா என்பதை அறியவும், தடுப்பூசி பலன் தருகிறதா என்பதைத் தெரிந்துகொள்ளவும் ‘ஆன்டிபாடி பரிசோதனை’ உதவுகிறது. பொதுவாக, ஒரு வைரஸ் நம் உடலைத் தாக்கினால் அல்லது தடுப்பூசி போட்டுக்கொண்டால் உடலின் நோய்த் தடுப்பாற்றல் மண்டலம் அந்தக் கிருமியைத் தாக்கி அழிக்க ‘ஐஜிஜி’, ‘ஐஜிஎம்’ எதிரணுக்களை (IgG, IgM Antibodies) ரத்தத்தில் உருவாக்கும். இவற்றை இந்தப் பரிசோதனையில் அறியலாம்.

‘ஐஜிஜி’ எதிரணுக்கள் கரோனா தடுப்பூசிபோட்டுக்கொண்டவர்களுக்கு 14 - 21 நாட்களுக்குப் பிறகு ரத்தத்தில் தோன்றும். கரோனா தொற்றாளர்களுக்கு அறிகுறிகள் தோன்றிய 14 - 21 நாட்களுக்குப் பிறகு இவைதோன்றும். ஆகவே, அந்த நேரத்தில் ‘ஆன்டிபாடி பரிசோதனை’ செய்வது நல்லது.

‘ஐஜிஎம்’ எதிரணுக்கள் தொற்றின் அறிகுறிகள் ஆரம்பித்த 7-ம் நாளில் தோன்றும். 28 நாட்கள் வரை ரத்தத்தில் இருக்கும். அந்த நேரத்தில் இந்தப் பரிசோதனையை செய்ய வேண்டும். இதில் ‘ஐஜிஎம்’ எதிரணுக்கள் இருந்தால் கரோனா தொற்று சமீபத்தில் ஏற்பட்டதாக அறியலாம். நடைமுறையில் இதை மிக அரிதாகவே மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

முக்கியமான கரோனா அறிகுறிகள்

காய்ச்சல், இருமல், உடல் அசதி, பசிக் குறைவு, தொண்டை வலி, உடல் வலி, தலைவலி, வாந்தி, வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு, மூச்சுத்திணறல், வாசனை உணர்விழப்பு, சுவை உணர்விழப்பு.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டியவர்கள் யார்?

l 5 நாட்களுக்குப் பிறகும் நீடிக்கும் காய்ச்சல், வறட்டு இருமல், மூச்சுத்திணறல், உடல் அசதி, சாப்பிட முடியாத நிலைமை ஆகியவற்றுடன் ஆக்ஸிஜன் செறிவு 95%க்குக் கீழ் இருப்பவர்கள்.

l நுரையீரல் பாதிப்பு மிதமான அளவில் உள்ள 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், இருதய நோய், சிறுநீரக நோய், புற்றுநோய் போன்ற துணை நோய் உள்ளவர்கள்.

l நுரையீரல் பாதிப்பு தீவிரமாக உள்ள அனைவரும்.

கட்டுரையாளர்: பொதுநல மருத்துவர்,தொடர்புக்கு: gganesan95@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x