

தேர்தல் முடிவு வந்து 24 நாட்களுக்குப் பிறகு, புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள பேரவைத் தலைவர் அறையில் எம்எல்ஏக்கள் இன்று பதவியேற்கின்றனர். பாஜகவின் 3 நியமன எம்எல்ஏக்கள் பதவி ஏற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையை சுட்டிக்காட்டி, தற்காலிக பேரவை தலைவராக பொறுப்பேற்க உள்ள லட்சுமி நாராயணனுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் கடந்த மே 2-ம் தேதி வெளியானது. என்ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி பெரும்பான்மை பெற்று ஆட்சியைப் பிடித்தது. கடந்த 7-ம் தேதி ரங்கசாமி மட்டும் முதல்வராக பதவியேற்றார். அமைச்சர்கள் யாரும் பதவியேற்கவில்லை. 9-ம் தேதி தற்காலிக பேரவைத் தலைவரை நியமிக்கும் கடிதத்தை ஆளுநர் தமிழிசைக்கு முதல்வர் ரங்கசாமி பரிந்துரை செய்தார். ஆனால், இந்த நியமனம் தொடர்பாக ஆளுநர் உத்தரவு பிறப்பிக்காததால் பேரவையைக் கூட்டி எம்எல்ஏக்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க முடியவில்லை.
இதற்கிடையே, அமைச்சர்கள் பதவிகளை ஒதுக்கீடு செய்வதில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக இடையில் உடன்பாடு ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், முதல்வர் பரிந்துரையின்பேரில் கடந்த 21-ம் தேதி புதுச்சேரி 15-வது சட்டப்பேரவையின் தற்காலிகபேரவைத் தலைவராக எம்எல்ஏ லட்சுமி நாராயணனை துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நியமித்ததாக அறிவிப்புவெளியானது.
இதைத் தொடர்ந்து ஆளுநர் மாளிகையில் தற்காலிக பேரவைத் தலைவர் லட்சுமி நாராயணனுக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை இன்று காலை பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். அதையடுத்து காலை 10 முதல் 12 மணிக்குள் சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள பேரவைத் தலைவர் அறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் நியமன எம்எல்ஏக்களுக்கு அவர் பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.
நியமன எம்எல்ஏக்கள்
அதே நேரம், 3 நியமன எம்எல்ஏக்கள் நியமனம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதை சுட்டிக்காட்டி, தற்காலிக பேரவைத் தலைவராக பொறுப்பேற்க உள்ள லட்சுமி நாராயணனுக்கு புதுச்சேரி கரிக்கலாம்பாக்கம் ஊராட்சிமன்ற முன்னாள் தலைவர் ஜெகன்நாதன் நேற்று அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
நியமன உறுப்பினர்களாக மத்திய அரசால் வெங்கடேசன், ராமலிங்கம், அசோக் பாபுநியமிக்கப்பட்டுள்ளனர். முதல்வர் மட்டுமேபதவி ஏற்றுள்ளார். அமைச்சர்கள்,எம்எல்ஏக்கள் பதவியேற்காத நிலையில்3 நியமன எம்எல்ஏக்கள் நியமிக்கப்பட்டது தவறு. இதுபோன்ற அம்சங்களை சுட்டிக்காட்டி, எம்எல்ஏக்கள் நியமிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும். அதுவரை 3 நியமன எம்எல்ஏக்கள் செயல்பாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளேன்.
இவ்வழக்கு கடந்த 20-ம் தேதி நீதிபதிகள் அனிதா சுமந்த், செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், தேதி குறிப்பிடாமல் வழக்கை தள்ளிவைத்துள்ளனர்.
இந்நிலையில், அவர்களுக்கு பதவியேற்புசெய்து வைப்பது நீதிமன்ற அவமதிப்பு. இதுவழக்கு விசாரணைக்கும், இறுதி தீர்ப்புக்கும் குந்தகம் விளைவிக்கும் செயலாகும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.