

மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை குழுமத்தின் நிறுவனர் மறைந்த ஜி.வெங்கடசாமியின் சகோதரரும், தற்போதைய தலைவருமான ஜி.ஸ்ரீனிவாசன்(87) மாரடைப்பால் காலமானார்.
மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை குழுமத்தின் தலைவராக இருந்தவர் ஜி.ஸ்ரீனிவாசன்(87). அவருக்கு கடந்த மாதம் உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
இந்நிலையில் அவருக்கு நேற்று முன்தினம் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்தது. அண்ணா நகர் அருகே உள்ள அவரது வீட்டில் அஞ்சலி செலுத்துவதற்காக உடல் வைக்கப்பட்டது. அரவிந்த் கண் மருத்துவமனை நிர்வாகத்தினர் மற்றும் வடக்கு தொகுதி திமுக எம்எல்ஏ கோ.தளபதி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடல் மதுரை கீரைத்துரை மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.இதில் அரவிந்த் கண் மருத்துவமனையின் இயக்குநர் நாச்சியார், முன்னாள் கவுரவத் தலைவர் நம்பெருமாள்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஜி.ஸ்ரீனிவாசன் அழகப்பா பல்கலை.யில் கட்டுமானப் பொறியியல் படித்தவர். அமெரிக்காவில் உள்ள கன்சாஸ் பல்கலை.யில்எம்எஸ் படித்துள்ளார். அரவிந்த் கண் மருத்துவமனை பிரம்மாண்டமாக உருவாக முக்கியக் காரணமாக இருந்தவர். மருத்துவமனையின் உட்கட்டமைப்பு மற்றும் அனைத்துக் கட்டிடங்களும் அவரது ஆலோசனையின்பேரில் உருவாக்கப்பட்டன. லண்டனில் கட்டுமானத்தில் சிறப்புப் படிப்பை முடித்துள்ளார். கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக அரவிந்த் கண் மருத்துவமனையின் வளர்ச்சியில் அவரது பங்கு முக்கியமானது. மருத்துவமனையின் கட்டுமானம், நிதிப் பிரிவு நிர்வாகத்தை கவனித்து வந்தார். அவருக்கு மகள், மகன் உள்ளனர். இருவருமே அரவிந்த் கண்மருத்துவமனையில் மூத்த மருத்துவர்களாக பணிபுரிகின்றனர்.
அவரது மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை குழுமங்களின் தலைவர் ஸ்ரீனிவாசனின் மறைவு மருத்துவ உலகுக்கு பேரிழப்பு எனக் குறிப்பிட்டுள்ளார்.