அரசு மருத்துவமனையில் இருந்து சடலங்கள் மாற்றி அனுப்பிவைப்பு: தொடர்புடையவரின் குடும்பத்தினர் அதிர்ச்சி

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

கரோனா தொற்றாளர் சடலங்களைமாற்றி அனுப்பி வைத்த நிலையில்மற்றொரு தரப்பினர் வேறொருவரின் உடலை தகனம் செய்த சம்பவம் தொடர்பாக திருப்பூர் தெற்கு போலீஸார் மற்றும் வருவாய்த்துறையினர் விசாரிக்கின்றனர்.

திருப்பூர் 15 வேலம்பாளையம் நேரு நகரை சேர்ந்தவர் பாலசுப்பிர மணியம் (83). இவர், கரோனா தொற்று சிகிச்சைக்காக கடந்த வாரம் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாலை உயிரிழந்தார். கரோனா தொற்றாளர் என்பதால், அவரது சடலத்தை எரியூட்ட மின் மயானத்தில் நேற்று நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. அவரது குடும்பத்தினர் நேற்று காலை பிணவறையில், சடலத்தை பார்த்துவிட்டு சென்றனர். அதன்பின்னர், மாலை வந்து சடலத்தை ஆத்துப்பாலம் மின் மயானத்துக்கு எடுத்துச்செல்ல குடும்பத்தினர் வந்தனர். அப்போது, பாலசுப்பிர மணியத்தின் சடலம் இல்லை என்பது தெரியவந்தது.

இதையடுத்து, பிணவறையில் தேடி பார்த்ததில் ஆத்துப்பாலம் மின் மயானத்துக்கு அனுப்புவதற்கு பதிலாக,  சக்தி திரையரங்கம் அருகே ரோட்டரி மின்மயான பகுதிக்கு பாலசுப்பிரமணியத்தின் சடலத்தை அனுப்பி வைத்துள்ளனர். அப்போது, அங்கிருந்தவர்கள் தங்களது உறவினர் சடலம் என நினைத்து எரியூட்டி உள்ளனர். இதனை அறிந்த பாலசுப்பிரமணியம் குடும்பத்தினர் கடும் அதிர்ச்சி யடைந்தனர்.

இதுதொடர்பாக அளிக்கப்பட்ட தகவலின்பேரில் திருப்பூர் தெற்கு போலீஸார் விசாரித்து வருகிறார்கள். மருத்துவமனை ஊழியர்கள் கூறும்போது, "திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் அடையாளம் பார்த்த மற்றொரு தரப்பு உறவினர் சரியாக கவனிக்காததால் இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளது. மற்றொரு தரப்பினர், முகத்தை நன்கு பார்த்திருந்தால் இந்த குழப்பம் ஏற்பட்டிருக்காது. தொடர் புடையவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு சடலம் எரியூட்டப்பட்டிருக்கும்" என்றனர்.

இதற்கிடையே, மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று இரவு திருப்பூர் தெற்கு வட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in