Published : 26 May 2021 03:13 AM
Last Updated : 26 May 2021 03:13 AM

கரோனா தொற்று பாதித்தவர்களுக்கு காப்பீடு திட்டத்தின் கீழ் சிகிச்சையளிக்க மறுத்தால் தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை: அமைச்சர் முத்துசாமி எச்சரிக்கை

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த பத்திரிகையாளர்களுக்கான கரோனா தடுப்பூசி முகாமினை அமைச்சர் சு.முத்துசாமி தொடங்கி வைத்தார்.

ஈரோடு

தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம் வசூல் மற்றும் தமிழக அரசின் காப்பீடு திட்டத்தின் கீழ் கரோனா சிகிச்சை அளிக்க மறுப்பது தொடர்பாக புகார்கள் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும், என வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்தார்.

ஈரோட்டில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. ஈரோடு அரசு மருத்துவமனையில் தற்போது ஆக்சிஜன் வசதி கொண்ட 131 படுக்கைகள் உள்ளன. இதை 250 படுக்கைகளாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதே போல பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தற்போது 550 ஆக்சிஜன் படுக்கைகள் உள்ளன. வெளிமாவட்டங்களில் இருந்து அதிக அளவில் நோயாளிகள் வருவதால், மருத்துவக்கல்லூரி வளாகத்தில் உள்ள பழைய கட்டிடத்தில் கூடுதலாக 650 படுக்கைகள் அமைக்கப்பட உள்ளது.

இதில், வரும் 28-ம் தேதி ஆக்சிஜன் வசதி கொண்ட 300 படுக்கைகள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளது. இது தவிர, 200 படுக்கைகள் கொண்ட நிரந்தர கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகள் நிறைவுறும்போது, மொத்தம் 1550 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக மாற்றப்படும்.

கரோனா சிறப்பு சிகிச்சை மையங்களில் மொத்தம் 3500 படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் அங்கு 1000 படுக்கைகள் மட்டுமே நிரம்பி உள்ளது. அந்தியூர், பவானி, கோபி, சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைகளில், ஆக்சிஜன் வசதி கொண்ட கூடுதல் படுக்கைகள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம் வசூல் மற்றும் தமிழக அரசின் காப்பீடு திட்டத்தின் கீழ் கரோனா சிகிச்சை அளிக்க மறுப்பது தொடர்பாக புகார்கள் எதுவும் வரவில்லை.

அவ்வாறு புகார் வருமாயின் நடவடிக்கை எடுக்கப்படும். கோபி அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சை அளிப்பது இல்லை என்று தவறாக தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இம்மருத்துவமனையில் 143 படுக்கைகள் உள்ளன. இதில் 30 படுக்கைகள் மட்டுமே கரோனா நோயாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள படுக்கைகள் பொதுநோயாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.

பத்திரிகையாளர்கள் ஏமாற்றம்

முன்னதாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பத்திரிகையாளர்களுக்கான கரோனா தடுப்பூசி முகாமை அமைச்சர் சு.முத்துசாமி தொடங்கி வைத்தார். முகாமில் கோவிஷீல்டு தடுப்பூசி மட்டுமே உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஏற்கெனவே கோவேக்சின் தடுப்பூசி போட்டு, இரண்டாம் தவணை தடுப்பூசிக்காக வந்த பத்திரிகையாளர்கள் மற்றும் கோவேக்சின் போட்டுக்கொள்ள விரும்பிய பத்திரிகையாளர்கள் ஏமாற்றமடைந்தனர். முன்களப் பணியாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள பத்திரிகையாளர்களுக்காக, முதன்முறையாக நடக்கும் சிறப்பு முகாமில் கூட, இரு தடுப்பூசி மருந்துகளை வழங்க சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்காதது அதிருப்தி அளிப்பதாக முகாமில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x