

சென்னையில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், கோயம்பேடு சந்தைக்கு காய்கறி வரத்து அதிகரித்து, விற்பனை சரிந்ததால் பல டன் காய்கறிகள் வீணாகி அழுகின.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு கடை காய்கறி வியாபாரிகள் உள்ளனர். மேலும் 100-க்கும் மேற்பட்ட சில்லறை விலை காய்கறி சந்தைகளும் உள்ளன. அவை ஒவ்வொன்றிலும் 40-க்கு மேற்பட்ட வியாபாரிகள் காய்கறி விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். இது மட்டுமல்லாது ஆயிரக்கணக்கான தள்ளுவண்டி காய்கறி கடைகளும் உள்ளன. இந்த வியாபாரிகள் அனைவரும் தேவையான காய்கறிகளை கோயம்பேடு சந்தையில் இருந்தே வாங்குகின்றனர்.
நேற்று முன்தினம் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமலுக்கு வந்த நிலையில், மேற்கூறிய கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மாநகராட்சி சார்பில் பல்வேறு துறைகளுடன் இணைந்து 2,635 நடமாடும் கடைகள் இயக்கப்பட்டு வருகின்றன. இவை மட்டுமே கோயம்பேடு சந்தையில் காய்கறிகளை 2 நாட்களாக வாங்கி வருகின்றன.
தமிழகத்தில் உள்ள வணிக வளாக காய்கறி கடைகள், ஏசி வசதியுடன் இயங்கி வந்த காய்கறி கடைகள் உள்ளிட்டவையும் மூடப்பட்டதால், அவற்றுக்கு அனுப்பப்பட்டு வந்த காய்கறிகளும் தற்போது கோயம்பேடு சந்தைக்கு வருவதால், வரத்து அதிகரித்துள்ளது. அதற்கு ஏற்ற விற்பனை இல்லாமல் விலையும் குறைந்துள்ளது.
கோயம்பேட்டில் நேற்று தக்காளி மொத்த விலை கிலோ ரூ.7, கத்தரிக்காய், முட்டைக்கோஸ், புடலங்காய், கோவைக்காய், சுரைக்காய், வெள்ளரிக்காய் தலா ரூ.5, வெண்டைக்காய், பீட்ரூட், கருணைக்கிழங்கு, பாகற்காய், அவரைக்காய், பெரிய வெங்காயம் தலா ரூ.10 என குறைந்துள்ளது. விற்காத காய்கறிகள் அழுகத் தொடங்கியதால் பல டன் காய்கறிகளை வியாபாரிகள் குப்பைக் கிடங்கில் கொட்டினர்.
இது தொடர்பாக கோயம்பேடு மலர், காய், கனி வியாபாரிகள் நலச் சங்கத் தலைவர் எம்.தியாகராஜனிடம் கேட்டபோது, ``திங்கள்கிழமை காலை பல டன் காய்கறிகள் விற்காமல் தேக்கம் அடைந்தன. முடிந்தவரை விலையைக் குறைத்து அவை விற்கப்பட்டன. இருப்பினும் விற்காத காய்கறிகள் சுமார் 10 டன் அளவில் வீணாகின. இதுபற்றி விவசாயிகளுக்கு தகவல் தெரிவித்து, காய்கறிகளை குறைவாகவே அனுப்ப அறிவுறுத்தி இருக்கிறோம். இதனால் நேற்று அவை குறைவாகவே வந்தன” என்றார்.