

கரோனா தொற்று பரவலைத் தடுக்க, பொதுமக்கள் முழு அளவில் ஒத்துழைப்பு தரவேண்டும் என காவல் ஆணையர் சங்கர் ஜிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கரோனா தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு, தமிழகத்தில் கடந்த 24-ம் தேதி முதல் ஒரு வார காலத்துக்கு தளர்வுகளில்லா முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதையடுத்து சென்னை போலீஸார் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
அதன்படி சென்னை பெருநகரில் உள்ள 12 காவல் மாவட்ட எல்லைகளில் 13 எல்லை வாகன தணிக்கை சாவடிகள் மற்றும் அனைத்து காவல் நிலைய எல்லைகள் செக்டார்களாக வகைப்படுத்தி சாலை தடுப்புகள் மற்றும் வாகனத் தணிக்கைச் சாவடிகள் அமைத்து கண்காணித்து வருகின்றனர்.
மிக அத்தியாவசிய தேவைக்காக பொதுமக்கள் செல்ல இ-பதிவு சான்று கட்டாயமாக்கப்பட்டு, இ-பதிவு வைத்திராத பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
ஊரடங்கை மீறியதாக நேற்று முன்தினம் மட்டும் 2,409 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1,805 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. முகக்கவசம் அணியாத 1,946 நபர்கள், சமூக இடைவெளியைக் கடைபிடிக்காத 188 நபர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், “போலீஸாரால் பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை, ஊரடங்கு முடிந்த பின்னர் நீதிமன்றம் மூலம் மட்டுமே பெற முடியும். அதற்கு நீண்ட நாட்களாகும். அதுவரை அந்த வாகனங்கள், பறிமுதல் செய்யப்படும் எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும்.
பொதுமக்கள் தமிழக அரசின் ஊரடங்கு வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைபிடித்து கரோனா தொற்று பரவலை தடுக்க முழு அளவில் ஒத்துழைக்க வேண்டும்” என சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.