கரோனா தொற்று உயிரிழப்புக்கான இறப்பு சான்றிதழ் கிடைப்பதில் தாமதம்: பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுவதாக புகார்

கரோனா தொற்று உயிரிழப்புக்கான இறப்பு சான்றிதழ் கிடைப்பதில் தாமதம்: பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுவதாக புகார்
Updated on
1 min read

செங்கல்பட்டு மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் இறப்பு சான்றிதழை இணையதளத்தில் பதிவேற்ற தாமதிப்பதால் அவர்களது குடும்பத்தினர் வாரிசு சான்றிதழ் பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தின் கரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த 24-ம் தேதி வரை 1,542பேர் இறந்துள்ளனர். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தால் அந்த மருத்துவமனை எந்த உள்ளாட்சி அமைப்பின்கீழ் வருகிறதோ அந்த பகுதியில் உள்ள நகராட்சி, பேரூராட்சி, கிராம நிர்வாக அலுவலர் ஆகியோரிடமே இறப்பு சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம்.

மாறாக நகராட்சி, பேரூராட்சி மற்றும் அரசு மருத்துவமனைகளில் இறந்தால் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி மற்றும் அரசு மருத்துவமனையில் பொது சுகாதார ஊழியர் ஒருவர் சான்றிதழை வழங்குவார். அவர் இவை அனைத்தையும் ஆய்வு செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இதனால் சான்றுகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர். சம்பந்தப்பட்டவர்களிடம் சென்று இறப்பு சான்றிதழ் கேட்டால், இணையதளத்தில் பதிவேற்றம் செய்துவிடுவோம். நீங்கள் அதிலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள் எனக்கூறி அனுப்புகின்றனர்.

ஆனால், அவர்கள் சொல்வதுபோல் உடனே பதிவேற்றம் செய்யாமல், தாமதம் செய்கின்றனர்.

அவசிய தேவை

இதுகுறித்து சம்பந்தப்பட்டஅலுவலர்களிடம் கேட்கும்போது, "கரோனா பரவல் காரணமாக சுழற்சி முறையில் ஒரு சிலர் மட்டுமே பணிக்கு வருகின்றனர். இதனால் தாமதம் ஏற்படுகிறது என்று சமாதானம் சொல்கின்றனர்.

இறப்பு சான்றிதழை வைத்துதான் வாரிசு சான்றிதழ் பெற முடியும். வங்கி, காப்பீடு மற்றும் அரசிடம் இருந்து கிடைக்கும் நிவாரணங்கள் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கும் இறப்பு சான்றிதழ் அவசியம். இதனால் இறந்தோரின் வாரிசுகள் பரிதவிக்கின்றனர்.

எனவே, கரோனாவால் உயிரிழந்தவர்கள் இறப்பு சான்றிதழை உடனடியாக இணையத்தில் பதிவேற்றம் செய்து சம்பந்தப்பட்டவர்களுக்கு சான்றிதழ் கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in