Published : 25 May 2021 09:48 PM
Last Updated : 25 May 2021 09:48 PM

கரோனா தொற்றாளர் சடலம் மாற்றி ஒப்படைத்து எரிப்பு: திருப்பூரில் குடும்பத்தினர் அதிர்ச்சி- போலீஸ், வருவாய்த்துறையினர் விசாரணை

திருப்பூர்

கரோனா தொற்றாளர் சடலத்தை மாற்றி அனுப்பிவைத்த நிலையில் மற்றொரு தரப்பினர் எரித்துவிட்டு சென்ற சம்பவம் தொடர்பாக திருப்பூர் தெற்கு போலீஸார் மற்றும் வருவாய்த்துறையினர் விசாரிக்கின்றனர்.

திருப்பூர் 15 வேலம்பாளையம் நேரு நகரைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம்(83). இவர் கரோனா தொற்றுக்காக, திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த வாரம் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி நேற்று மாலை உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, கரோனா தொற்றாளர் என்பதால் அவரது சடலம் இன்று மின் மயானத்தில் எரியூட்ட நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து அவரது குடும்பத்தினர் இன்று காலை பிணவறையில், பார்த்துவிட்டு சென்றனர். அதன்பின்னர், மாலை வந்து சடலத்தை ஆத்துப்பாலம் மின்மயானத்துக்கு எடுத்துச்செல்ல குடும்பத்தினர் வந்தனர். அப்போது, தொற்றால் இறந்த பாலசுப்பிரமணியத்தின் சடலம் இல்லை என்பதை அறிந்த குடும்பத்தினர், கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து பிணவறையில் மற்ற சடலங்களைத் தேடி பார்த்தபோது, பாலசுப்பிரமணியம் சடலம் ஆத்துப்பாலம் மின்மயானத்துக்கு பதிலாக, ஸ்ரீசக்தி திரையரங்கம் அருகே ரோட்டரி மின் மயான பகுதிக்கு அனுப்பி வைத்துள்ளனர். அப்போது அங்கிருந்தவர்கள், தங்களது உறவினர் சடலம் என நினைத்து எரியூட்டி உள்ளனர்.

இதனை அறிந்த பாலசுப்பிரமணியம் குடும்பத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக திருப்பூர் தெற்கு போலீஸாருக்கு தகவல் அளித்தனர். அவர்கள் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

இது தொடர்பாக மருத்துவமனை ஊழியர்கள் கூறியதாவது: திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அடையாளம் பார்த்த மற்றொரு தரப்பின் உறவினர், சரியாக கவனிக்காததால் இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளது. மற்றொரு தரப்பினர், முகத்தை நன்கு பார்த்திருந்தாலே இது போன்ற குழப்பம் ஏற்பட்டிருக்காது. உரிய சடலம் சம்பந்தப்பட்டவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு எரியூட்டப்பட்டிருக்கும் என்றனர்.

இந்த நிலையில் இச்சம்பவம் தொடர்பாக, திருப்பூர் தெற்கு வட்டாட்சியர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தற்போது விசாரணை மேற்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x