

முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 4 தனியார் மருத்துவமனைகளில் கரோனாவுக்கு இலவசமாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
தமிழகத்தில் கரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதற்கான கட்டணத்தை அரசு காப்பீட்டு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களின் மருத்தவக் காப்பீட்டு திட்டத்தின் மூலம் இலவச மருத்துவச் சேவைகளை அரசு செயல்படுத்தி வருகிறது.
அதன் அடிப்படையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 4 தனியார் மருத்துவமனைகளில் கரோனா நோய் தொற்றுக்கு சிகிச்சை அளிக்க அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஸ்கடர் மெமோரியல் மருத்துவமனை, அப்பல்லோ கே.எச். மருத்துவமனை, திருமலை மிஷன் மருத்துவமனை மற்றும் சிஎம்சி கோவிட் மையம் கன்னிகாபுரம்,ராணிப்பேட்டை மாவட்டம் ஆகிய 4 தனியார் மருத்துவமனைகளில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீட்டு திட்டத்தின் கீழ் அனைத்து வகையான (கரோனா தொற்று உட்பட) சிகிச்சைகளுக்கும் ரூ.5 லட்சம் வரை இலவசமாக மருத்துவ சிகிச்சை பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்ட அட்டையை பயன்படுத்தி தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக கரோனா மருத்துவ சிகிச்சையை பெற்று பயன்பெறலாம்’’. இவ்வாறு அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.