

கூரியர் சேவை முழுமையாக செயல்படாமல் முடங்கியதால் கரோனா தவிர மற்ற நீண்ட கால நோய்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைப்பெறும் நோயாளிகள், அவர்களுக்கான மருந்துகளை தனியார் மருத்துவமனைகளிடம் இருந்து பெற முடியவில்லை.
அதனால், இந்த மருந்துகளை நம்பி சிகிச்சை பெறும் நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது தபால் சேவையைப் போல் தனியார் கூரியர் சேவை அத்தியாவசியமாகிவிட்டது. ஆனால், கரோனா’ முழு ஊரடங்கில் தனியார் கூரியர் சேவைகள் முடங்கிப்போய் உள்ளது.
முன்போல் முழுமையாக செயல்படவில்லை. பொதுவாக பெரிய மருந்து நிறுவனங்கள், வாகனங்கள் மூலம் தனியார் மருத்துவமனைகளுக்கான மருந்துகளை அனுப்பிவிடுகின்றன.
ஆனால், சிறுசிறு மருந்தகங்கள் மற்றும் தனியார் மருந்து குடோன் நிறுவனங்களுக்கு கூரியர் சேவை மூலமே மருந்துகளை மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் அனுப்பிக் கொண்டிருக்கின்றன.
தற்போது இதுபோன்ற நெருக்கடியான காலங்களில் அவர்கள் கூட மொத்தமாக வாகனங்களில் மருந்துகளை வாகனங்களில் அனுப்பிவிடலாம். ஆனால், புற்றுநோய், சர்க்கரை நோய், ஆஸ்துமா, பிபி, இதய நோய், கல்லீரல் நோய் உள்ளிட்ட பல்வேறு நீண்ட கால நோய்களுக்கு நோயாளிகள், ஒவ்வொரு பெருநகரங்களிலும் அதற்கான சிறப்பு தனியார் மருத்துவமனைகளிலே சிகிச்சை பெறுகின்றனர்.
இவர்கள், மாவட்டம் விட்டு அருகில் உள்ள பெருநகரங்களில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு இரண்டு மாதம், மூன்று மாதத்திற்கு ஓரு முறை மருத்துவமனைகளுக்கு வந்து சிகிச்சைப்பெறுகின்றனர்.
அந்த தனியார் மருத்துவமனைகள், மாதத்திற்கு ஒரு முறையோ அல்லது குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரு முறையோ மருந்துகளை அந்த நோயாளிகளுடைய முகவரிக்கு டெலிவரி செய்கிறார்கள்.
தற்போது கரோனா ஊரடங்கில் கூரியர் சேவை முடங்கிப்போய் உள்ளது. தபால் அலுவலகங்களில் கேட்டால் அவர்கள் மருந்துகளை கொடுத்து டெலிவரி பதிவு செய்தால் எப்போது சென்றடையும் என்று உறுதியாக சொல்ல முடியாது என்று கூறுகிறார்கள்.
அதனால், தனியார் மருத்துவமனைகள், தனிப்பட்ட முறையில் நோயாளிகளுக்கு மருந்துகளை கூரியர் சேவை மூலம் அனுப்ப முடியவில்லை.
அவர்கள் எழுதும் அந்த மருந்துகள், வெளி மெடிக்கல் ஸ்டோர்களில் கிடைப்பதில்லை. அதனால், பெரும் நகரங்களில் தனியார் மருத்துவமனைகளை நம்பி சிகிச்சை பெறும் நோயாளிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இதுகுறித்து தனியார் மருத்துவமனைகள் தமிழக அரசிடம் வலியுறுத்தியதால் இன்று முதல் அந்தந்த மண்டல அலுவலகங்களில் உள்ள கூரியர் சேவை செயல்படுவதாக கூறியுள்ளனர்.
ஆனால், அவர்களும் டெலிவரி ஆர்டர்கள் வருவதைப் பொறுத்தே உடனடியாக மருந்துகளை அனுப்பமுடியும் என்று கூறுவதால் சம்பிராதயத்திற்கு திறந்து வைத்துள்ளனர்.
அதனால், தனியார் மருத்துவமனைகள், தங்கள் நோயாளிகளுக்கு மருந்துகளை அனுப்ப முடியாமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.