

திருநெல்வேலி மாவட்டத்தில் 18 முதல் 44 வயது உள்ளவர்களுக்கான தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவை தலைவர் மு. அப்பாவு திசையன்விளையில் இதைத் தொடங்கி வைத்தார்.
மேலும் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் அரசு நிர்ணயம் செய்த விலையில், நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனையினை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து இடையன்குடி, உவரி பகுதிகளில் கரோனா தடுப்பூசி போடும் பணிகளை தொடங்கி வைத்தார். அத்துடன் கபசூர குடிநீர் வழங்கியும், தீயணைப்பு வாகனம் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளை தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அப்பாவு கூறும்போது,
திருநெல்வேலி மாவட்டத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட அனைத்து, அலுவலர்களும் சிறப்பாக பணியாற்றியதால் கடந்த 4 நாட்களாக கரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஆக்ஸிஜன் தட்டுபாட்டை அறவே நீக்கி விட்டார்கள். திருநேல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள குமாரபுரம் அந்தோனியார் ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் 200 படுக்கை வசதிகளுடனும், வள்ளியூர் யூனிவர்செல் கல்லூரியில் 200 படுக்கை வசதிகளுடனும் கரோனா சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இன்னும் ஒரு வார காலத்திற்குள், இந்த பணிகள் அனைத்தும் முடிக்கப்படும் என்று தெரிவித்தார்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு, சேரன்மகாதேவி சார் ஆட்சியர் பிரதீக் தயாள் , சுகாதார பணிகள் துணை இயக்குநர் சுமதி, பேரூராட்சிகள் உதவி இயக்குநர் சு.தேவராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. காலனி பகுதியில் நடைபெற்ற முகாமில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி போடும் பணியை சட்டப் பேரவை உறுப்பினர் மு. அப்துல் வகாப் தொடங்கி வைத்தார்.