Published : 25 May 2021 07:37 PM
Last Updated : 25 May 2021 07:37 PM

மேகேதாதுவில் புதிய அணைக்கான கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும் கர்நாடக அரசு: தடுத்து நிறுத்த தினகரன் வலியுறுத்தல்

டிடிவி தினகரன்: கோப்புப்படம்

சென்னை

மேகதாது பகுதியில் புதிய அணைக்கான கட்டுமானப் பணிகளைத் தடுத்து நிறுத்த வேண்டும் என, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டு, அதற்கான விரிவான திட்ட அறிக்கைக்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தில் விண்ணப்பித்தது. இதற்கு தமிழக அரசு சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

தமிழக எல்லைக்கு முந்தைய மேகதாது பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணையைக் கட்டப்போவதாக குமாரசாமி முதல்வராக இருந்த காலத்திலிருந்து கர்நாடக அரசு பல ஆண்டுகளாகக் கூறி வருகிறது. தற்போது மேகேதாது அணையைக் கட்டியே தீருவோம் என்று, கர்நாடக முதல்வர் எடியூரப்பா கூறியிருந்தார். மேகதாது அணை விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் இருக்கிறது.

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகத்தில் காவிரி ஆற்றை நம்பியுள்ள பாசன மாவட்டங்கள் பாலைவனமாகிவிடும் என்ற அச்சம்தான் விவசாயிகளின் மத்தியில் உள்ளது. காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடகத்தில் யாராலும் அணை கட்ட முடியாது. காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவிலோ அல்லது வேறு இடங்களிலோ அணை கட்டுவதற்கான நிபந்தனைகளைக் காவிரி நடுவர் மன்றமும், உச்ச நீதிமன்றமும் தெளிவாக வரையறுத்துள்ளன.

ஆனால், மேகதாது பகுதியில் அணை கட்டும் முயற்சியிலும் கட்டுமானப் பணிகளிலும் கர்நாடக அரசு இறங்கியுள்ளது.

இது தொடர்பாக, டிடிவி தினகரன் இன்று (மே 25) தன் ட்விட்டர் பக்கத்தில், "மேகதாது பகுதியில் காவிரியின் குறுக்கே புதிய அணைக்கான கட்டுமானப் பணிகளைக் கர்நாடக அரசு தொடங்கியிருப்பதாக வரும் செய்திகள் பெரும் அதிர்ச்சி அளிக்கின்றன. மத்திய அரசின் அனுமதி பெறாமல் மேற்கொள்ளப்பட்டிருக்கும் இப்பணிகளை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும்.

மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டிவிட்டால், காவிரியில் துளி தண்ணீர் கூட தமிழகத்திற்கு வராமல் போய்விடும். காவிரி டெல்டா பகுதி மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் முக்கால்வாசி பகுதிகள் குடிநீருக்காக காவிரி நீரைத்தான் நம்பி இருக்கின்றன.

ஏற்கெனவே திமுக ஆட்சிக் காலங்களில்தான் காவிரி உள்ளிட்ட நதிநீர்ப் பிரச்சினைகளில் தமிழகம் தன்னுடைய உரிமையைக் கோட்டைவிட்டு நின்றது. இப்போதும் அப்படி நடந்துவிடக் கூடாது" எனப் பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x