Published : 25 May 2021 07:02 PM
Last Updated : 25 May 2021 07:02 PM

மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை: தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு 

சென்னை

சென்னை, கே.கே.நகர் தனியார் பள்ளி ஆசிரியர் மீதான பாலியல் புகார் குறித்து தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ள தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம், டிஜிபி திரிபாதி 3 நாட்களுக்குள் அறிக்கை அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

சென்னை கே.கே.நகர் தனியார் பள்ளியில் ஆன்லைன் வகுப்பின்போது பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்தது, ஆபாச எஸ்.எம்.எஸ் அனுப்பியது உள்ளிட்ட பல்வேறு புகார்களின் கீழ் பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது அனைத்து மகளிர் காவல் போலீஸாரால் போக்சோ சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டார். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அவரது செல்போன், லேப்டாப்புகள் போலீஸாரால் கைப்பற்றப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்நிலையில் ஆசிரியரின் செயலுக்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேலும் யாராவது மாணவிகள் பாதிக்கப்பட்டிருந்தால் தாராளமாக புகார் அளிக்கலாம், புகார் ரகசியம் காக்கப்படும் எனத் துணை ஆணையர் ஜெயலட்சுமி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்த விவகாரத்தில் பதிலளிக்க பள்ளி நிர்வாகி, முதல்வர் உள்ளிட்ட 5 பேருக்கு மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. போலீஸாரும் ஆசிரியரைக் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளனர். இந்நிலையில் பத்திரிகை, ஊடகங்களில் வெளியான செய்தியின் அடிப்படையில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையமும் தாமாக முன்வந்து (Suo-motu) வழக்குப் பதிவு செய்துள்ளது. இது தொடர்பாக டிஜிபி திரிபாதிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கவும், மாணவிகள் மனநலம் பாதிக்கப்படாமல் இருக்க அவர்களுக்கு உளவியல் ரீதியாக சிகிச்சை அளிக்கவும், ஆன்லைன் வகுப்புகளுக்காக வகுக்கப்பட்ட விதிகளைக் கடுமையாகக் கடைப்பிடிக்கவும், குழந்தைகள் கட்டாயக் கல்வி உரிமை பாதுகாப்புச் சட்டம் சரியாக கடைப்பிடிக்கப்பட உரிய நடவடிக்கை எடுக்கவும் ஆணையம் உத்தரவிட்டு, கைது செய்யப்பட்ட ஆசிரியர் மீது போக்சோ உள்ளிட்ட குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புச் சட்டங்களைப் போடவும் வலியுறுத்தியுள்ளது.

பெருந்தொற்றுக் காலத்தில் ஆன்லைன் வகுப்புகள் அதிகமாகி வரும் இச்சூழலில் இதுபோன்ற சம்பவங்கள் வேதனை அளிப்பதாகத் தெரிவித்துள்ள ஆணையம், அவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள பள்ளி மாணவிகளுக்கு உரிய ஆலோசனைகள் வழங்கி, இதுபோன்ற குற்றங்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நடைபெறாமல் இருப்பதனை உறுதிப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும், ஆன்லைன் வகுப்புகள் குறித்த தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் வெளியிட்ட வழிகாட்டு நடைமுறைகள், பள்ளி, கல்லூரிகளில் முறையாகப் பின்பற்றப்படுகிறதா என்பதனை உறுதிப்படுத்தி ஆன்லைன் வகுப்புகளைப் பள்ளி நிர்வாகம் முழுமையாகக் கண்காணிக்க வேண்டும் என ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

பள்ளி மாணவிகளின் தொடர் புகார்களை அடுத்து பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனைக் கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்ற இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை செய்து 3 நாட்களுக்குள் முழு அறிக்கையை அனுப்புமாறு தமிழக காவல்துறை தலைவர் திரிபாதியை தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x