Published : 25 May 2021 06:09 PM
Last Updated : 25 May 2021 06:09 PM

செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தைத் தமிழக அரசே கையிலெடுக்க வேண்டும்: மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

சென்னை

கரோனா பரவலைத் தடுக்க தடுப்பூசி பேராயுதம் என்பதால் தடுப்பூசி வாங்க அரசு முழு முயற்சியில் ஈடுபட வேண்டும். அவ்வாறு இயலாவிட்டால் செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தைத் தமிழக அரசு கையகப்படுத்தி தடுப்பூசி தயாரிக்க மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

மே மாதம் சிகிச்சை, வெளியூர்ப் பயணம் எனப் பல்வேறு காரணங்களால் ரேஷன் பொருட்களை வாங்க இயலாதவர்கள் ஜூன் மாதம் சேர்த்து வாங்க அனுமதிக்க வேண்டும் எனவும் மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை வைத்துள்ளது.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இன்று விடுத்துள்ள அறிக்கை:

“கரோனா நோய்த் தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கு அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதே பேராயுதமாக விளங்குகிறது. இந்நிலையில் மத்திய அரசு தமிழகத்திற்குத் தேவையான தடுப்பூசி வழங்குவதற்கு மறுத்து வருகிறது. இதனால் உலக நாடுகளிலிருந்து தடுப்பூசி வரவழைக்கத் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. உலகளாவிய சில நிறுவனங்கள் மத்திய அரசுகள் மூலம் மட்டுமே தடுப்பூசி வழங்க முடியும் எனவும், மாநில அரசுகளுக்கு அவ்வாறு வழங்க இயலாது எனவும் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் மத்திய அரசிடமிருந்து தமிழகத்திற்குத் தேவையான தடுப்பூசிகளை வற்புறுத்திப் பெறுவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலை உருவாகியுள்ளது. எனவே, மத்திய அரசு தாமதிக்காமல் தமிழக அரசு கேட்டுள்ள அளவு தடுப்பூசிகளை வழங்கிட வேண்டுமென வற்புறுத்துவதோடு, தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் இக்கோரிக்கையை மத்திய அரசிடம் வற்புறுத்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.

* இந்தியாவில் தற்போது இரண்டு நிறுவனங்களுக்கு மட்டுமே தடுப்பூசி தயாரிக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஏற்கெனவே செங்கல்பட்டிலும், நீலகிரியிலும், இந்தியாவின் மற்ற இடங்களிலும் உள்ள பொதுத்துறை நிறுவனங்களுக்கு அனுமதி மறுத்து வருகிறது. சமீபத்தில் இந்நிறுவனங்களில் தடுப்பூசி தயாரிப்பதற்கு தனியார் நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்களை (டெண்டர்) மத்திய அரசு கோரியுள்ளது.

இதன் மூலம் பொதுத்துறை நிறுவனங்களிலும், தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அனுமதியளிக்க மத்திய அரசு முனைந்துள்ளது. தடுப்பூசி வியாபாரத்தில் மீண்டும் தனியார் நிறுவனங்கள் கொள்ளை லாபம் ஈட்டுவதற்கு வழி திறந்து விடப்படுகிறது.

* செங்கல்பட்டு ஹெச்.எல்.எல் பயோடெக் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களில் தடுப்பூசி தயாரிக்கும் பணிகளை அந்த நிறுவனங்களை மேற்கொள்வதற்கு மத்திய அரசு அனுமதியையும், உரிய நிதி உதவியையும் செய்திட வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். தனியார் நிறுவனங்களுக்கு நிதி உதவி செய்து தடுப்பூசி தயாரிக்க வாய்ப்பளிக்கும் மத்திய அரசு, பொதுத்துறை நிறுவனங்களுக்கு நிதியுதவி செய்து தடுப்பூசி தயாரிக்க அனுமதியளிக்க மறுப்பது இந்திய நாட்டு மக்களின் உயிரோடு விளையாடுகிற செயல் என்று சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

* ஒருவேளை மத்திய அரசு மேற்கண்ட பொதுத்துறை நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க மறுத்து வரும் நிலையில், செங்கல்பட்டில் உள்ள ஹெச்.எல்.எல். பயோடெக் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனத்தைத் தமிழக அரசே கையிலெடுத்து தடுப்பூசி தயாரிக்க முன்வர வேண்டுமென வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறோம். இதற்கான நிதி உதவியை மத்திய அரசிடமிருந்து தமிழக அரசு வற்புறுத்திப் பெற வேண்டும்.

இந்நிறுவனத்தை தமிழக அரசு கையிலெடுத்து தடுப்பூசி தயாரிக்கும் பணியில் சற்று தாமதம் ஏற்படும் எனினும், தொலைநோக்குப் பார்வையில் இது தமிழக மக்களுக்கும், இதர மாநில மக்களுக்கும் தடுப்பூசி வழங்கிட பேருதவியாக அமையும் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

* தமிழகத்தில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசியம் அல்லாத பல தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. அந்நிறுவனங்களின் பேருந்துகளில் தொழிலாளர்களை ஏற்றிச் சென்று பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இதனால் அத்தொழிலாளர்கள் மத்தியிலும், அவர்களது குடும்பங்களுக்கும் கரோனா தொற்று பரவுகிற நிலை ஏற்படுகிறது.

எனவே, அத்தியாவசியப் பொருட்களின் உற்பத்தி தொடர்பான நிறுவனங்கள் தவிர மற்றவற்றில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கும், ஊழியர்களுக்கும் சம்பளத்தோடு முழு விடுப்பு அளிப்பதற்குத் தமிழக அரசு உரிய நடவடிக்கைகளையும், உத்தரவுகளையும் பிறப்பிக்க வேண்டும்.

* கோவிட் பெருந்தொற்றை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளில் முன்களப் பணியாளர்களின் செயல்பாடு மிக முக்கியமானது. அவர்களுக்கான சில திட்டங்களும் ஏற்கெனவே தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளன. பொதுமக்களோடு அதிகம் தொடர்பில் உள்ள அன்றாட களப்பணிகளில் ஈடுபட்டு வரும் பேருந்துகளின் நடத்துநர், ஓட்டுநர், மின்வாரிய ஊழியர்கள், நியாய விலைக் கடை ஊழியர்கள், கூட்டுறவுத்துறை களப் பணியாளர்கள், உள்ளாட்சித்துறை ஊழியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் உள்ளிட்டவர்களை முன்களப் பணியாளர் பட்டியலில் இணைத்து பாதுகாப்பு ஏற்பாடுகள், தடுப்பூசியில் முன்னுரிமை போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

* அதேபோல அன்றாட மக்களைச் சந்தித்து பணியாற்றி வரும் வங்கி, காப்பீட்டுத் துறை ஊழியர்கள்-முகவர்கள் மற்றும் தற்காலிக, ஒப்பந்த ஊழியர்கள், செக்யூரிட்டி ஊழியர்கள் உட்பட அனைவரையும் இப்பட்டியலில் இணைத்து இத்தகைய பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த வேண்டும்

* நியாயவிலைக் கடைகளில் பயோ மெட்ரிக் முறையின் அடிப்படையில் கைவிரல் ரேகை வைப்பது கரோனா பரவலுக்கு வழிவகுக்கும் என்பதனால் கரோனா காலம் முடியும் வரை பொருட்களைப் பெறுவதற்கு பயோ மெட்ரிக் முறையிலிருந்து விலக்களித்திட வேண்டும்.

* கரோனா மற்றும் ஊரடங்கு காரணத்தினால் ஏராளமானோர் மருத்துவமனைகளிலும், தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களிலும் சிகிச்சையில் உள்ளனர். மேலும் பல லட்சக்கணக்கான மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளனர். எனவே, இக்குடும்பத்தினருக்கு நியாயவிலைக் கடைகளில் மே மாதம் வழங்கும் பொருட்களை ஜூன் மாதத்தில் சேர்த்து பெற்றுக் கொள்வதற்கு உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறோம்”.

இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x