

மின்சாரக்கட்டணம் இனி மாதந்தோறும் கணக்கிட்டு வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், கரோனா பரவல் காரணமாக மின் ஊழியர்கள் மின்சார அளவை எடுக்க வராத நிலையில் பொதுமக்களே மீட்டர் யூனிட் அளவை செல்போனில் புகைப்படம் எடுத்து வைத்து மின் கட்டணம் கட்டும்போது காட்டி பணம் செலுத்தலாம் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
சேலத்தில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைக் குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வுக்கூட்டத்தை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
“சேலத்தில் இன்று நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் சில முடிவுகள் எங்களுக்கு தெரியவந்தது. அதன்படி கரோனா பரிசோதனை செய்த 24 மணி நேரத்திற்குள் சோதனை முடிவை வெளியிட முடிவெடுத்துள்ளோம். அவர்கள் குறித்த தகவல்களை கண்காணிக்கும் அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டு தொற்றாளர்களுக்கு அட்மிஷன் அளிக்கப்படும்.
முதல்வர் காப்பீடு திட்டம் குறித்து சேலம் மாவட்டத்தில் தனியார் மருத்துவமனையில் முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் என்னவகை கட்டணம் அதில் மூன்று வகையான கட்டணங்கள் உள்ளது அவைகளை குறிப்பிட்டு மருத்துவமனை விளம்பர பலகை வைக்க சொல்லி இருக்கிறோம். அதில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் எங்கு புகார் அளிக்கலாம் என்று உதவி எண்ணும் இருக்கும்.
மின் கட்டணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் உள்ளது. மின்கட்டணங்கள் குறித்து ஏற்கெனவே சில அறிவிப்புகள் வெளியிடப்பட்டிருந்தது. அதற்கு சில மாற்று கருத்துகள் வந்ததால் அதுகுறித்து முதல்வர் அளித்த வழிகாட்டுதல்படி மின்கட்டணம் குறித்து அறிவிப்பு வெளியிட்டோம். அதன்படி மின் கட்டணத்தை அளவிட உங்கள் வீட்டில் மின் கட்டண மீட்டரில் உள்ள யூனிட் அளவை செல்லில் புகைப்படம் எடுத்து வாட்ஸ் அப்பில் அனுப்பலாம்.
இரண்டு நாட்களுக்கு முன் ஆய்வுக்கூட்டம் நடத்தி ஒரு வாட்ஸ் அப் நம்பர் கொடுத்திருந்தோம். அந்த நம்பரில் அனுப்பினால் போதும். அதைவிட மின்கட்டணத்தை செலுத்தச் செல்லும்போது அந்த படத்தை எடுத்துச் சென்றால் போது. அந்த நேரத்தில் எடுத்துச் சென்று இது என் மீட்டர் யூனிட் எனக்காட்டி அதற்கு ஏற்ப பணத்தை செலுத்தலாம். இப்போது ஒன்றும் அதில் அவசர தேவை ஒன்றும் இல்லை. அதற்கு கால அவகாசம் உள்ளது. மின் கட்டணம் செலுத்தச் செல்லும்போது எடுத்துச் சென்றாலே போதும்”.
இவ்வாறு அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.