

மாவட்ட ஆட்சியருடன் ஏற்பட்ட கருத்து மோதலைத் தொடர்ந்து விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு புதிய டீன் நியமிக்கப்பட்டுள்ளார்.
விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீனாக கடந்த 17ம் தேதி முதல் பொறுப்பு வகித்து வந்தவர் சுகந்தி ராஜகுமாரி. இவர், பணியில் சேர்ந்தது முதல் மாவட்ட ஆட்சியரை அலுவல் நிமித்தமாக சந்திக்கவில்லை என்பதோடு கரோனா தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்திலும் பங்கேற்கவில்லை. அதோடு, வழக்கறிஞராக உள்ளது தனது கணவர் மூலம் மாவட்ட ஆட்சியருக்கு தொலைபேசியில் மிரட்டல் விடுத்ததாக புகார் எழுந்தது.
இதனால் விளக்கம்கேட்டு விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி டீன் சுகந்தி ராஜகுமாரிக்கு மாவட்ட ஆட்சியர் இரா.கண்ணன் நோட்டீஸ் அனுப்பினார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் இரா.கண்ணனுக்கும், சுகாதாரத்துறை அரசு முதன்மைச் செயலருக்கும் டீன் சுகந்தி ராஜகுமாரி அனுப்பிய விளக்கக் கடிதத்தில் தான் இதுபோன்ற சூழ்நிலையில் பணியாற்ற விரும்பவில்லை என்றும், தான் தனது 30 ஆண்டுகளாக பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற விரும்புவதாகவும் தெரிவித்திருந்தார். அதோடு, விடுமுறையில் சென்றார்.
இந்நிலையில், விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு புதிய டீனாக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டீனாகப் பொறுப்பு வகித்து வந்த சங்குமணி நியமிக்கப்பட்டுள்ளார்.
விடுமுறையில் சென்றுள்ள விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி டீன் சுகந்தி ராஜகுமாரி விடுமுறை முடிந்து வந்த பின் அவருக்கு எங்கு பணி என்பதற்கானை வழங்கப்படும் என சுகாதாரத்துறை அரசு முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன் உத்தரவில் தெரிவித்துள்ளார்.
அதோடு அந்த ஆணையில், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி டீன் அசோகன் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரிக்கும், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி டீன் முத்துச்செல்வன் கரூர் மருத்துவக் கல்லூரிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதோபோல், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி டீன் ரேவதி சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.