

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2,000 வழங்கும் பணிகள் 98 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் கரோனா தொற்றால் வாழ்வாதாரத்தை இழந்த அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரேஷன் கடைகள் மூலம் கரோனா நிவாரண நிதியுதவியாக ரூ.4,000 வழங்கப்படும் என, திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, திமுக ஆட்சி அமைத்த உடன் தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற உடன், கரோனா நிவாரண உதவி தொகை வழங்குவது உள்ளிட்ட 5 திட்டங்களில் அவர் கையெழுத்திட்டார்.
இதில், ரேஷன் கடைகள் மூலம் அரிசி மற்றும் சர்க்கரை குடும்ப அட்டைதாரர்களுக்கு மே மாதம் முதல் கட்டமாக ரூ.2,000, அடுத்த மாதம் 2-ம் கட்டமாக ரூ.2,000 என, மொத்தம் ரூ.4,000 வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
அதன்படி, வேலூர் மாவட்டத்தில் 4 லட்சத்து 23 ஆயிரத்து 871 ரேஷன் அட்டைதாரர்கள் கரோனா நிவாரண உதவித்தொகை பெற தகுதியானவர்கள் என அறிவிக்கப்பட்டது. அவர்களுக்காக, முதல் தவணை நிதியாக ரூ. 84 கோடியே 77 லட்சத்து 42 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
கரோனா நிவாரண உதவித்தொகைக்கான டோக்கன்கள் ரேஷன் கடை ஊழியர்கள் குடும்ப அட்டை எண் அடிப்படையில் வீடு, வீடாக சென்று வழங்கினர். ஒரு நாளைக்கு தலா 200 பேருக்கு நிவாரண உதவித்தொகை பெறும் வகையில் டோக்கன்கள் வழங்கப்பட்டது.
நிவாரண உதவித்தொகை காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை தனிமனித இடைவெளியை கடைப்பிடித்து கரோனா நிவாரண நிதியை பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள 698 ரேஷன் கடைகளில் கரோனா நிவாரண உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 4 லட்சத்து 13 ஆயிரத்து 956 குடும்ப அட்டைதாரர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு உள்ளது. இன்னும் 9,915 கார்டுகளுக்கு மட்டுமே வழங்கப்பட உள்ளது. இது 97.66 சதவீதமாகும்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 509 ரேஷன் கடைகளில் 3 லட்சத்து 10 ஆயிரத்து 537 அட்டைதாரர்களுக்கு நிவாரண உதவித்தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவரை 3 லட்சத்து 7 ஆயிரத்து 523 அட்டைதாரர்களுக்கு ரூ.2,000 வழங்கப்பட்டுள்ளது. இன்னும் 3,014 அட்டைதாரர்களுக்கு மட்டுமே நிவாரண தொகை வழங்க வேண்டியுள்ளது. இது 99.03 சதவீதமாகும்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 614 ரேஷன் கடைகளில் ரூ.2,000 நிவாரணத் தொகை வழங்கும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. இம்மாவட்டத்தில் 3 லட்சத்து 28 ஆயிரத்து 207 அட்டைதாரர்களுக்கு ரூ.2,000 வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதுவரை, 3 லட்சத்து 21 ஆயிரத்து 824 அட்டைதாரர்களுக்கு நிவாரணத்தொகை வழங்கப்பட்டுள்ளது. இது 98.06 சதவீதமாகும். மீதமுள்ள 6,383 அட்டைதாரர்களுக்கு நிவாரண தொகை வழங்க வேண்டியுள்ளது.
மூன்று மாவட்டத்தில் 98.18 சதவீதம் குடும்ப அட்டைதாரர்களுக்கு கரோனா நிவாரண நிதியுதவி முழுமையாக வழங்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள அட்டைதாரர்களுக்கு விரைவில் நிவாரண உதவித்தொகை வழங்கப்படும் எனவும், அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.