மதுரை காந்தி நினைவு அருங்காட்சியக செயலாளர் கரோனா தொற்றால் உயிரிழந்தார்

மதுரை காந்தி நினைவு அருங்காட்சியக செயலாளர் கரோனா தொற்றால் உயிரிழந்தார்
Updated on
1 min read

மூத்த காந்தியவாதியும், காந்தி நினைவு அருங்காட்சியகத்தின் செயலாளரும், தமிழ்நாடு காந்தி நினைவு நிதியின் தலைவருமான க.மு.நடராஜன் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

காந்தியப் பொருளாதார நிபுணர் ஜே.சி.குமரப்பாவிடம் நேரடி பயிற்சி பெற்ற இவர் தமக்கு கிடைத்த அரசுப்பணியை புறக்கணித்து பொதுவாழ்வில் காந்தியத்தைத் தேர்ந்தெடுத்தவர்.

வினோபாவின் பூமிதான இயக்கத்தில் பங்கேற்றவர். ஜெயப்பிரகாஷ் நாராயணனின் முழுமைப்புரட்சி இயக்கத்தில் முழுமையாகப் பங்கேற்றவர். கிராம சுயராஜ்யம், கதர், கிராமக் கைத்தொழில், மதுவிலக்கு போன்றவற்றை மையப்படுத்தி பல்வேறு இயக்கப் பணிகள் செய்தவர்.

உலகளாவிய வகையில் காந்தியத்தைக் கொண்டு செல்லும் வகையில் அமெரிக்கா, இத்தாலி, பிரான்சு, ஜெர்மனி, இலங்கை போன்ற நாடுகளில் காந்தியப் பணிகளை மேற்கொண்டவர்.

இறால் பண்ணை எதிர்ப்புப் போராட்டத்தில் ஜெகந்நாதன் அவர்களுடன் இணைந்து பங்கேற்று வெற்றி பெற்றார். கிராமராஜ்யம், சர்வோதயம் மலர்கிறது, Sarvodayam Talisman பத்திரிகைகளின் ஆசிரியராக இருந்து வருபவர்.

மறைந்த க.மு.நடராஜனுக்கு பேராசிரியர் இராமலிங்கம், விஜயன், கேசவன், என மூன்று மகன்களும் ஜெயந்தி என்ற மகளும் உள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in