Published : 25 May 2021 02:19 PM
Last Updated : 25 May 2021 02:19 PM

கரோனா குறித்த நம்பகமான தகவல்கள்: தொலைக்காட்சிகள் மூலம் ஒளிபரப்பக் கோரி வழக்கு

சென்னை

அரசு மற்றும் தனியார் தொலைக்காட்சிகளில் கரோனா சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளைக் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி ஒளிபரப்ப உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது விரைவில் விசாரணைக்கு வரும் எனத் தெரிகிறது.

கரோனா தொற்று அபாயம், தொற்று ஏற்பட்டால் வரும் விளைவுகள், ஆக்சிஜன் தேவை, மூச்சுத்திணறல் என கரோனா குறித்து அச்சமூட்டும் பல்வேறு பொய்யான தகவல்கள் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவுகின்றன.

இதைப் படிக்கும் மக்கள் உண்மை எனப் பொய்யான் பீதியூட்டும் தகவல்களை நம்பி மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். அதேபோன்று சமூக வலைதளங்களில் தடுப்பூசிக்கு எதிராகப் பரப்பப்படும் தவறான தகவல்களை மக்கள் நம்பி, தடுப்பூசி போடுவதில் தயக்கம் காண்பிக்கின்றனர். இதனால் தொற்றுப் பரவலைத் தடுக்க மேலும் அரசு போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு உரிய தகவல்களைக் கொண்டுசேர்ப்பது சம்பந்தமாக குறிப்பிட்ட நேரம் இதற்கென ஒதுக்கி கரோனா குறித்த உண்மையான, நம்பகமான தகவல்களை ஒளிபரப்ப ஊடகங்களுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் என்பவர் பொதுநல வழக்கு ஒன்றை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். அவரது பொதுநல மனுவில், “கரோனா தொற்றும், அதைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்படும் ஊரடங்கு காரணமாக மக்கள் தீவிரமான மன அழுத்தத்துக்கு ஆளாகியுள்ளனர்.

சக மனிதர்களால் புறக்கணிக்கப்படுவதால், கரோனா தொற்று பாதித்தவர்கள் தற்கொலை முயற்சிகளில் இறங்குகின்றனர். சமூக வலைதளங்களில் கரோனா பற்றி தவறான தகவல்கள் பரப்பப்படுவதால் மக்கள் அச்சத்தில் இருக்கின்றனர்.

கரோனா குறித்த உண்மையான தகவல்களை இணையதளங்களில் வெளியிட்டால் மட்டுமே மக்கள் மனதில் உள்ள அச்ச உணர்வைப் போக்க முடியும் என்பதால், இரவு 7 மணி முதல் 9 மணி வரையிலான நேரத்தில் ஒரு மணி நேரத்திற்கு அரசு மற்றும் தனியார் தொலைக்காட்சிகளில் கரோனா குறித்த அறிவுரைகள், தடுப்பூசி, சிகிச்சை, உணவுக் கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப உத்தரவிட வேண்டும்” என மனுவில் கோரியுள்ளார்.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி அமர்வில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x