வேலூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 611 பேருக்குத் தொற்று; பாதிப்பில் இருந்து தப்பிக்க தடுப்பூசி போட்டுக்கொள்ள அழைப்பு

வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள பள்ளியில் 18 வயது முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. | படம்.வி.எம்.மணிநாதன்.
வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள பள்ளியில் 18 வயது முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. | படம்.வி.எம்.மணிநாதன்.
Updated on
1 min read

வேலூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 611 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நோய் பாதிப்பில் இருந்து தப்பிக்க, தகுதியுள்ள அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வர வேண்டும் என சுகாதாரத் துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் நேற்றைய நிலவரப்படி கரோனா பெருந்தொற்றால் 39,126 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். மருத்துவ சிகிச்சையில் குணமடைந்த 34,213 பேர் வீடு திரும்பியுள்ளனர். நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள 4,271 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பலன் அளிக்காமல் இதுவரை 642 பேர் உயிரிழந்துள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 611 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் நோய்த் தொற்றின் பாதிப்பு 700-ஐக் கடந்தது. இந்நிலையில், நேற்று 375 பேர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், நோய் பாதிப்பு படிப்படியாகக் குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று 611 பேருக்கு நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதால் சுகாதாரத் துறையினர் கலக்கமடைந்துள்ளனர்.

வேலூர் மாநகராட்சிப் பகுதியில் மட்டும் இன்று ஒரே நாளில் 350 பேருக்குப் பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நகர்ப் புறங்களுக்கு இணையாகத் தற்போது கிராமப் பகுதிகளிலும் கரோனா வேகமாகப் பரவி வருகிறது. வேலூர் மாவட்டத்தை ஒட்டியுள்ள கிராமப் பகுதிகளில் இன்று மட்டும் 200க்கும் மேற்பட்டோருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

வேலூர் மாநகராட்சிப் பகுதியைச் சேர்ந்த 2,200 பேர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். இதில் 1,400 பேருக்கு வீடுகளிலேயே சிகிச்சை அளிக்கப்படுகிறது. நோய் பாதிப்பில் இருந்து பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள, தகுதியுள்ள அனைவரும் கட்டாயமாகத் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் 18 வயது முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்குத் தற்போது கரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியுள்ளதால் தகுதியுள்ள அனைவரும் அருகேயுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆதார் எண்ணைச் சமர்ப்பித்து தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும் என மாவட்ட சுகாதாரத் துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in