

கரூர் மாவட்டத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்து ரேஷன் பொருட்களை ஆர்வமுடன் பொதுமக்கள் வாங்கிச் செல்கின்றனர்.
கரூர் மாவட்டத்தில் கூட்டுறவுத் துறையின் கீழ் 590, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கீழ் 2 என மொத்தம் 592 ரேஷன் கடைகள் உள்ளன. இவற்றின் கீழ் 3.15 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன.
இம்மாதத்தில் கரோனா முதற்கட்ட நிவாரணமாக ரூ.2,000 வழங்கும் பணிக்கான டோக்கன் கடந்த 10ஆம்தேதி முதல் 3 நாட்களுக்கு வழங்கப்பட்டு, கடந்த 15ஆம் தேதி முதல் கரோனா நிவாரண உதவிகள் வழங்கும் பணிகள் நடைபெற்றன.
தமிழகத்தில் முழு ஊரடங்கு நேற்று தொடங்கிய நிலையில் ரேஷன் கடைகள் வரும் 31ஆம் தேதி வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டு, நேற்று மூடப்பட்டது. இதனால் இம்மாத ரேஷன் பொருட்களை வாங்காத ரேஷன் அட்டைதாரர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில் இன்று (மே 25) முதல் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை ரேஷன் கடைகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ரேஷன் பொருட்கள் வாங்க கரூர் நகரம் மற்றும் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகள் முன் ஆண்கள், பெண்கள் இன்று வந்தனர். இரண்டு தரப்பினரும் தனித்தனி வரிசையாக, சமூக இடைவெளி விட்டு, நீண்ட வரிசையில் காத்திருந்து சர்க்கரை, பருப்பு, எண்ணெய், கோதுமை, அரிசி உள்ளிட்ட பொருட்களை வாங்கினர்.
கரூர் நகரில் உள்ள 70க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள 500க்கும் மேற்பட்ட கடைகளில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வமுடன் பொருட்களை வாங்கிச் சென்றனர்.