

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக ஆக்சிஜன் படுக்கைகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கரோனா தொற்றின் வேகம் திருப்பூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொற்றின் வேகம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால் மாவட்டம் முழுவதும் அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வழிகின்றன. தொடர்ந்து சிகிச்சை மற்றும் தீவிர சிகிச்சைக்கான படுக்கைகளுக்கான தேவைகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. இதனால் திருப்பூர் மாவட்டத்தில் பலரும் ஆக்சிஜன் படுக்கைக்கு அல்லாடும் சூழல் ஏற்பட்டுள்ளது.
திருப்பூர் பிச்சம்பாளையம் புதூரைச் சேர்ந்த 72 வயது முதியவர், மகள் வீட்டுக்கு மனைவியுடன் தாராபுரம் சென்றிருந்தார். சென்ற இடத்தில் திடீரென உடல்நிலை மோசமாக, கரோனா பரிசோதனை மேற்கொண்டார். அப்போது அவருக்குத் தொற்று உறுதியானது. சி.டி. ஸ்கேன் பரிசோதனை மேற்கொண்டனர். அதில் நுரையீரலில் தொற்றின் தீவிரம் அதிகம் இருப்பதாக அங்குள்ளவர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் ’வார் ரூம்’ 0421- 1077ஐத் தொடர்பு கொண்டு, ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை தேவை எனth தெரிவித்தனர். ஆனால் திருப்பூர் மாவட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் எங்கும் ஆக்சிஜன் படுக்கை எங்கும் இல்லை என ’வார் ரூமில்’ தெரிவிக்கவே அந்தக் குடும்பத்தினர் மனம் உடைந்தனர்.
தொடர்ந்து, திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தாராபுரம் அரசு மருத்துவமனைகளில் முயற்சி செய்தும் ஆக்சிஜன் படுக்கை கிடைக்கவில்லை. இதையடுத்து, அவருக்கு காங்கயம் அரசு மருத்துவமனை வளாகத்தில் இருந்த ஆக்சிஜன் பேருந்தில் நேற்று முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இரண்டு நாட்கள் போராட்டத்துக்குப் பின்னர், அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
காத்திருக்கும் தொற்றாளர்கள்
இதுதொடர்பாகப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கூறும்போது, ஒரு பெரும் ஆபத்துக்குக்கூட உதவி செய்ய முடியாத நிலையில்தான் இன்றைக்கு மருத்துவமனைகள் உள்ளன. திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 30 பேர் காத்திருக்கிறார்கள். அதன் பின்னர்தான் சேர்த்துக்கொள்ள முடியும் என்கின்றனர். இது மிகவும் சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது. ஒரே நேரத்தில் பலரும் முண்டியடித்தாலும், நோயாளியின் தன்மை அறிந்து சிகிச்சை அளிக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உண்டு. ஆகவே மாவட்டத்தில் வட்டார அளவில் ஆக்சிஜன் வசதியை மேம்படுத்த வேண்டும் என்று தெரிவித்தனர்.
இதுகுறித்துத் திருப்பூர் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் மருத்துவர் ஜெகதீஷ்குமார் கூறும்போது, மாவட்டத்தில் 1,317 ஆக்சிஜன் படுக்கைகள் உள்ளன. ஆக்சிஜன் படுக்கைகளின் தேவை சமீபநாட்களாக அதிகரித்துள்ளது என்று தெரிவித்தார்.
இதற்கிடையே திருப்பூர் மாவட்டத்தில் நாள்தோறும் சுமார் 1500 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதில் 45 சதவீதத்துக்கு மேற்பட்டோர் தொற்று தீவிரமான பிறகு, கிச்சைக்கு வரக்கூடிய சூழலில், ஆக்சிஜன் படுக்கைகளின் தேவை அதிகரித்துள்ளது. ஆகவே ஆக்சிஜன் படுக்கைகளின் எண்ணிக்கையை மாவட்ட அளவில் உயர்த்த வேண்டும் என்கிற கோரிக்கையும் வலுக்கத் தொடங்கி உள்ளது.