Last Updated : 25 May, 2021 11:21 AM

 

Published : 25 May 2021 11:21 AM
Last Updated : 25 May 2021 11:21 AM

கோவை பாலகங்களில் பால்வளத்துறை அமைச்சர் அதிகாலையில் ஆய்வு

கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள பாலகத்தில் இன்று ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் நாசர். | படம்: ஜெ.மனோகரன். 

கோவை

கோவையில் உள்ள பாலகங்களில் பால்வளத்துறை அமைச்சர் நாசர் இன்று (மே 25) அதிகாலை ஆய்வு செய்தார்.

தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் நேற்று இரவு கோவைக்கு வந்தார். கோவையில் இன்று (மே 25) அதிகாலை முதல் பாலகங்களில் அவர் ஆய்வு மேற்கொண்டார். புலியகுளம் பாலகம், காந்திபுரம் நடமாடும் ஆவின் பாலகம், ஆர.எஸ்.புரம், பொன்னைய ராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பாலகங்களில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் நாசர், பாலின் தரத்தை சோதனை செய்தார். மேலும், பால் வாங்க வந்தவர்களிடம் பால் விலைக் குறைப்பு தொடர்பாக எடுத்துக் கூறினார்.

இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அமைச்சர் நாசர் கூறும்போது, ’’தமிழக முதல்வரின் ஆணையை ஏற்று, இந்த கரோனா காலத்தில் மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களான காய்கறித் தொகுப்புகள், பழங்கள், தண்ணீர், மருத்துவம், மருத்துவ உபகரணங்கள், பால் உள்ளிட்டவை தங்கு தடையின்றி பொதுமக்களுக்குக் கிடைக்க வேண்டும் என்ற உணர்வின் அடிப்படையில், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அதிகாரிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ஆகியோரைப் பந்தயக் குதிரை வேகத்தில் முடுக்கிவிட்டு கரோனா என்ற சங்கிலித் தொடரை அறுத்தெறிய வேண்டும் என்பதற்காக இந்த முழு அடைப்பை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கிறோம்.

அதேவேளையில் பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த காய்கறித் தொகுப்புகள், பால் உள்ளிட்டவை பொதுமக்களுக்குச் சரியானபடி செல்வது தொடர்பாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சென்னையில் நேற்று ஆய்வு மேற்கொண்ட நிலையில், இன்று கோவை, திருப்பூரிலும், நாளை தென் மாவட்டங்களிலும் ஆய்வு மேற்கொள்ள உள்ளேன். கோவையில் ஆவின் சிறப்பாகச் செயல்படுகிறது. தமிழக முதல்வரின் ஆணையை நிறைவேற்றி வருகிறது’’ என்று தெரிவித்தார். தொடர்ந்து, பச்சாபாளையத்தில் உள்ள ஆவின் பிளான்ட்டை அமைச்சர் நாசர் பார்வையிட்டார்.

இந்த ஆய்வின்போது, பால்வளத்துறை ஆணையாளர் நந்தகோபால், மாவட்ட ஆட்சியர் எஸ்.நாகராஜன், பொது மேலாளர் ரவிக்குமார், முன்னாள் எம்எல்ஏ நா.கார்த்திக் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x