

முழு ஊரடங்கு அமல்படுத்துவதற்காக ஒருநாள் அளிக்கப்பட்ட தளர்வால் இருவார ஊரடங்கு பயனற்றதாகி விடும் சூழல்ஏற்பட்டுள்ளது. மேலும், வெளியூர் பேருந்துகள் இயக்கப்பட்டதால் கிராமங்களில் கரோனா தொற்று அதிகரிக்கும் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள், மருத்துவ நிபுணர்கள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்றுகடந்த ஆண்டு மார்ச் முதல் வாரத்தில் பரவத் தொடங்கியது. பின்னர் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் தொற்று அதிகரித்ததால், நாடுமுழுவதும் மார்ச் 22-ம் தேதி ஒருநாள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, 23-ம்தேதி உரையாற்றிய பிரதமர் மோடி, மார்ச் 25 முதல் ஏப்.14-ம் தேதி வரை 21 நாட்கள் நாடுமுழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவித்தார்.
இடையே ஒருநாள் மட்டுமே இருந்ததால் சொந்த ஊர்களுக்குச் செல்ல ரயில்,பேருந்து நிலையங்களில் மக்கள் அதிகஅளவில் கூடினர். காய்கறிகள், மளிகைப்பொருட்களை வாங்குவதற்கு மார்க்கெட்கள், கடைகளில் மக்களின் கூட்டம் அலைமோதியது. பிரதமரின் திடீர் அறிவிப்புகரோனா பரவலுக்கு வழிவகுக்கும். பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர் என்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
இதற்கிடையே தமிழகத்தில் கரோனாதொற்று குறைந்து வந்த நிலையில், கடந்தபிப்ரவரி மாதம் கரோனா 2-வது அலைபரவத் தொடங்கியது. முதல் அலையைவிட தீவிரமாக இருந்ததால், பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரிக்கத் தொடங்கியது. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கடந்த 10-ம் தேதி முதல் இருவார ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இருப்பினும் தொற்று பல மடங்கு அதிகரித்தது.
இந்நிலையில், கடந்த 22-ம் தேதி மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின் அன்று மதியமே 24-ம் தேதி முதல் ஒரு வாரத்துக்கு கடும் கட்டுப்பாடுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவித்தார். இடையே ஒன்றரை நாள் மட்டுமே இருந்ததால், சொந்த ஊர்களுக்குச் செல்ல பேருந்து நிலையங்களில் மக்கள் குவிந்தனர். மார்க்கெட்கள், கடைகளில் மக்களின் கூட்டம் அலைமோதியது.
கரோனா தொற்றின் முதல் அலையின்போது குற்றம்சாட்டிய திமுக, இரண்டாவது அலையின்போது அதே தவறை செய்துள்ளது. ஒரே நேரத்தில் பேருந்து நிலையங்கள், மார்க்கெட்கள் மற்றும் கடைகளில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியது கரோனா தொற்று பரவலுக்கு காரணமாகியுள்ளது. இதனுடைய தாக்கம் ஒரு வாரத்துக்குப்பின் தெரிய வரும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள், மருத்துவ நிபுணர்கள் கூறியதாவது: கரோனா பரவலைத் தடுக்க ஒருவாரமுழு ஊரடங்கு அமல்படுத்துவது நல்லவிஷயம்தான். அதேநேரம் ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் தளர்வுகளை அளித்து இருக்கக் கூடாது. முக்கியமாக, சொந்த ஊர்களுக்கு செல்ல பேருந்துகளை இயக்கி இருக்கக் கூடாது.
தமிழகத்தில் தற்போதைய நிலையில் தினமும் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். இதில், பெரும்பாலானோர் சென்னை, மதுரை, கோவை, திருச்சி போன்ற நகரங்களில் இருப்பவர்கள். 100பேருக்கு பரிசோதனை செய்தால் 20-க்கும்மேற்பட்டோருக்கு தொற்று உறுதியாகிறது. பேருந்துகள் இயக்கப்பட்டதால் நகரங்களில் வசிப்பவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டனர். இதன்மூலம், கிராமங்களில் கரோனா தொற்று அதிகரிக்கக் கூடும். இந்த பாதிப்பு அடுத்த வாரம்தெரியும். இருவார ஊரடங்கில் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்ட கரோனா பரவல், ஒரே நாள் தளர்வால் பயன் இல்லாமல் போகும் சூழல் ஏற்பட்டுள்ளது. கிராமங்களில் கரோனா பரவலைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
சந்தைகள், கடைகளில் குவிந்த மக்கள்
சமூக ஆர்வலர்கள் இதுகுறித்து கூறும்போது, ‘‘ஒரு வாரம் முழு ஊரடங்கு அறிவிப்பு வெளியான 22-ம் தேதியே, வணிகர்களுடன் இணைந்து மாநகராட்சி, தோட்டக்கலை, கூட்டுறவுத்துறை மூலம் வாகனங்களில் காய்கறிகள் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு முறையாக பொதுமக்களிடம் சென்றடையவில்லை. இதனால் சமூக இடைவெளியின்றி காய்கறிகளையும், பழங்களையும் வாங்கிச் சென்றனர். தமிழகஅரசு கூடுதல் கவனத்துடன் செயல்பட்டிருந்தால் சந்தைகளில் கூட்டம் கூடுவதைத் தவிர்த்திருக்க முடியும். மேலும், கரோனா தொற்று பரவலுக்கான வாய்ப் பும் இருந்திருக்காது’’ என்றனர்.
ரேஷன் கடைகளில் ரூ.2 ஆயிரம் விநியோகம்: கரோனா பரவும் அபாயம்!
தமிழகத்தில் கரோனா பரவலால், பொதுமக்களின் வாழ்வாதார பாதிப்பை கருத்தில் கொண்டு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு முதல்கட்டமாக ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. இதைப் பெற குறிப்பிட்ட நாள், நேரத்துடன் டோக்கன் வழங்கப்பட்டிருந்தாலும், சமூக இடைவெளியின்றி, முகக் கவசம் அணியாமல் நியாயவிலைக் கடைகளில் கூட்டம் கூடுவதைக் காண முடிந்தது.அதேநேரம், முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை பயனாளிகள் வங்கிக்கணக்குக்கு நேரடியாக அரசு அனுப்பி வைக்கிறது. ஆனால், கரோனா காலத்தில் வழங்கப்படும் நிவாரணம் மட்டும் நேரடியாக நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படுவது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து உணவுத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘குடும்ப அட்டைதாரர்களின் ஆதார் இணைக்கப்பட்டிருந்த போதும், கைபேசி எண்கள் சரியாக இருப்பதில்லை. சிலரிடம் வங்கிக்கணக்கு எண் இருக்காது. வங்கிக்கணக்கு எண் விவரங்களை சேகரிக்க, அதற்கென குழு அமைத்து குடும்ப அட்டையுடன் சேர்க்க வேண்டும். அரசு இதற்கான நடவடிக்கைகளை எடுத்தால் வங்கிக் கணக்குக்கே பணத்தை அனுப்பலாம். நியாயவிலைக்கடை பணியாளர்களின் சுமையும் குறையும்’’ என்றார்.