

மழை, வெள்ளத்தால் சென்னை யில் கட்டில், மெத்தைகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
சென்னை மாநகர், புறநகர் பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக பெய்த கன மழை, வெள்ளம் காரணமாக பல்வேறு பகுதிகளில் தரைத்தள வீடுகளில் வெள்ள நீர் புகுந்தது.
டிசம்பர் 1-ம் தேதி பெய்த வரலாறு காணாத மழையால் அடையாற்றின் கரையோரம் இருந்த சென்னை மாநகர், புறநகர் பகுதிகளில் 15 அடி உயரத்துக்கு வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் குடிசைகளில் வசிப்பவர்கள் மட்டுமல்லாது நடுத்தர மக்களும், வசதியானவர் களின் வீடுகளுக்குள்ளும் வெள்ள நீர் புகுந்தது.
இதனால் வீடுகளில் இருந்த கட்டில், மெத்தை, சோபாக்கள் உள்ளிட்ட மரத்திலான அறை கலன்கள், குளிர்சாதனப் பெட்டி, துணி துவைக்கும் இயந்திரம், கிரைண்டர், மிக்ஸி, டிவி போன்ற மின்சாரத்தில் இயங்கும் வீட்டு உபயோகப் பொருட்களும் பயன்படுத்த முடியாத அளவுக்கு சேதமடைந்துள்ளன.
கட்டில், மெத்தைகள் சேதமடைந்துள்ளதால் நடுத்தர மக்களும், வசதி படைத்தவர்களும் உடனடியாக கட்டில், மெத்தை வாங்க பர்னிச்சர் கடைகளுக்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர்.
இதனால் பெரும்பாலான கடைகளில் கட்டில், மெத்தை களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சென்னை தேனாம்பேட்டை அண்ணா சாலையில் வரிசையாக உள்ள பர்னிச்சர் கடைகளில் இருப்பில் இருந்த கட்டில், மெத்தைகள் அனைத்தும் விற்று தீர்ந்து விட்டதாக கடை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
தேனாம்பேட்டையில் பல ஆண்டுகள் பழமையான பர்னிச்சர் கடை உரிமையாளரிடம் கேட்டபோது, “மழை நீர் புகுந்த வீடுகளில் வசிப்பவர்கள் கட்டில், மெத்தைகளை கேட்டு அதிக அளவில் வருகின்றனர். இறக்குமதி செய்யப்பட்ட கட்டில், மெத்தைகள் உள்பட இருப்பு அனைத்தும் தீர்ந்து விட்டன. ஏராளமான ஆர்டர்கள் குவிந்துள்ளன. பல நிறுவனங்களின் கிடங்குகளில் தண்ணீர் புகுந்ததால் மெத்தைகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மழை காரணமாக வெளியூர்களில் இருந்து கட்டில்களை கொண்டு வருவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது'' என்றார்.
கட்டில் வாங்க வந்த சிலரிடம் பேசியபோது, “மழை நீர் புகுந்த வீடுகளில் பூச்சிகள் வருவதால் தரையில் படுக்க அச்சமாக உள்ளது. சுவற்றில் பூஞ்சைகளும் வந்துள்ளன.
குழந்தைகளை தரையில் படுக்க வைக்கவும் முடியாது. எனவே, உடனடியாக கட்டில், மெத்தைகளே தேவைப்படுகின்றன. அதற் காகவே அலைந்து கொண்டிருக் கிறோம்'' என்றனர்.
மரக் கட்டில்களுக்கு தட்டுப் பாடு ஏற்பட்டுள்ளதால் இரும்பு கட்டில்கள் விற்பனை சூடுபிடித் துள்ளது.